மழலைச் சொல்

Monday, August 28, 2006

பொறந்த நாளக்கி

நாங்க கடைக்குப் போனோம். அம்மாவும் அப்பாவும் சாமான்கள் வாங்கிட்டு இருக்கும்போது நா பொம்மைகள் பக்கம் இருந்த பெரிய கொட்டு வண்டி, மோட்டார் சைக்கிள் எல்லாத்தையும் பாத்துக்கொண்டு இருந்தேன். எனக்கு வண்டி வாகன பொம்மைகள் ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ப விருப்பம். சில வண்டிகள்ல சுவிட்ச்சைப் போட்டா ட்ர்ர் ட்ர்ர்ருன்னு கத்தும், லைட் அடிக்கும். சில பொம்மைகள் பாடும். பேசும். இன்னும் நிறைய பொம்மைகளை ஒவ்வொன்னா பாத்துக்கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தால அம்மாவும் அப்பாவும் போலாமான்னு கேட்டாங்க. "எனக்கு இது இது இது இது எல்லாத்தையும் பொறந்த நாளக்கி வாங்கித் தாங்க" ன்னு சொல்லிட்டு எல்லா பொம்மைகளையும் வச்சுட்டு கிளம்பிட்டேன். வரும்போது "I had fun" அப்படின்னு சொல்லிக்கிட்டு வந்தேன்.

Sunday, August 27, 2006

காந்தம்

என்னோட தாமஸ் ச்சூச்சூ ரயில்ல காந்தம் இருக்கு. அது பெட்டியை எல்லாம் வரிசை வரிசையா ஒட்டும். அண்டைக்கு பெரியப்பாவும் பெரியம்மாவும் எனக்கு ஒரு சாமான் அனுப்பினாங்க. அது ரெண்டு சுருக்குப்பை நிறைய காந்தம். அது எல்லாம் பள பளன்னு சின்னக் கல்லு மாதிரி இருக்கும். அந்தக் காந்தக் கட்டியை எல்லாம் சேத்தா கார், கப்பல், ரயில், வாத்து எல்லாம் செய்யலாம். சோஃபா இடுக்குல ஒரு காந்தம் விழுந்திட்டா எல்லா காந்தங்களையும் சங்கிலி மாதிரி செஞ்சு அதைத் தூக்கலாம். ஒரு நாள் அந்தக் காந்தத்தை தொலைக்காட்சிப் பெட்டி மேல வச்சேன். திடீர்னு திரை ஊதா (நாவல்) மாதிரி மாறிடுச்சு. அப்புறம் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்திட்டு மறுபடியும் போட்டப்புறம் தான் சரியா வந்துச்சு. காந்தத்தை கணினிகிட்டயும் வைக்கக் கூடாதுன்னு சொன்னாங்க.

Friday, August 25, 2006

என்னோட நல்ல நண்பர்

எனக்கு ஒரு நல்ல நண்பர் இருக்கார். அவர் பேரு ல்யூல். அவர் எத்தியோப்பியா நாட்டுக்காரர். அவர் வீடு எனக்குப் பக்கத்து வீடு. முந்தி எல்லாம் விளாட மாட்டோம். இப்ப நானும் ல்யூலும் அடிக்கடி விளாடுறோம். சில நேரம் விக்டரும் வருவார். விக்டர் இந்தியாக்காரர். காலையில எழும்பொதே "என்னோட நல்ல நண்பரோட இண்டக்கி விளாடுவேன்" னு சொல்லிக்கிட்டேதான் எழுவேன்.

அவர் சாய்ங்காலம் பள்ளிக்கூடத்திலேருந்து வந்ததும் எனக்கு போன் செய்வார். நாங்கள் போய் விளாடுவோம். கொட்டு வண்டி, பந்து, ஓடிப்புடிச்சு அதான் விளாடுவோம். இருட்டு வந்துடும். அப்புறம் அம்மா அப்பா கூட்டிட்டுப் போவாங்க. எனக்குக் கஷ்டமா இருக்கும். ஆனா இம்புட்டு நேரம் விளாண்டதுக்காக சந்தோஷப்படனும், நாளக்கி மறுபடியும் விளாடலாம்னு சொல்லுவாங்க. சரின்னு கேட்டுக்குவென். சில நேரம் மத்தியானத்தில "அம்மா, இதான் நாளைக்கா?"ன்னு கேப்பேன். அம்மா ஆமெண்டு சொன்னா, "இண்டக்கி என்னோட நல்ல நண்பரோட விளாடுவேன்"னு சொல்லுவேன். ஏன்னா எனக்கு விளாடுறது விருப்பம். என்னோட நல்ல நண்பரோட விளாடுறது விருப்பம். ஆனா அந்தப் படத்தில இருக்கது நாங்க இல்ல.

Thursday, August 24, 2006

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து

இன்னைக்கு நிலா வெளிச்சக் கதைநேரத்துக்கு நானும் அம்மாவும் போனோம். எப்பவும் போல இண்டைக்கும் Steve தான் கதை சொன்னாங்க. என்ன கதை தெரியுமா? எப்படி ஒட்டகச்சிவிங்கிக்கு நீளமான கழுத்து வந்துச்சு அப்புறம் எப்படி chip munksக்கு எல்லாம் முதுகில மூணு கோடு வந்துச்சுது எண்டு. கதை சொல்லி முடிஞ்சோடன, ஒட்டகச்சிவிங்கி செய்ய ஒரு தண்ணி குடிக்கிற குவளையும் ஒரு குச்சியும் ஒரு வாலும் ஒரு ஒட்டகச்சிவிங்கியோட படமும் எல்லாருக்கும் குடுத்தாங்க. அம்மாவும் நானும் ஒரு ஒட்டகச்சிவிங்கி செய்தோம்.

முதல்ல படத்துக்கு வண்ணம் பூசிட்டு, குச்சியில ஒட்டினோம்.அப்புறம் குவளையில ஒரு ஓட்டை போட்டு, வண்ணம் பூசி, வாலை அதில சொருகி வச்சோம்.
ஒட்டகச்சிவிங்கியை அந்த ஓட்டைக்குள்ள போட்டோம். இப்ப கழுத்து சின்னதாத்தானே இருக்கு?


இப்ப குவளைக்குள்ள கை விட்டு குச்சியத் தூக்கினா ஒட்டகச்சிவிங்கிக்குக் கழுத்து நீளமா வந்துடும்!

Wednesday, August 23, 2006

அப்பாவின் சமையல்

சனிக்கிழமை அப்பாதான் வீட்டில சமையற்காரர். சமைச்சாங்க சமைச்சாங்க ரொம்ப நேரமா சமைச்சுக்கொண்டே இருந்தாங்க. அம்மாவும் நானும் படங்களுக்கெல்லாம் நிறம் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்போ அப்பா என்னைக் கூப்பிட்டாங்க. என்கிட்ட ஒரு கிண்ணத்துல அவங்க சமைச்ச கறியைக் குடுத்து சுவைச்சுப் பாக்கச் சொன்னாங்க. அப்போ அம்மாவுக்கு எதுக்கோ கோவம் வந்திருச்சு. நா அம்மாகிட்ட கறியை நீட்டிக்கொண்டே சொன்னென், "அம்மா, இத மணந்து பாருங்க கோவமெல்லாம் போயிரும்." எல்லாரும் சிரிச்சாங்க.

Monday, August 21, 2006

நீங்க எதிர்பார்க்கிற பதில்

பாத்ரூமில நானும் அப்பாவும் நுரையைப் பத்திப் பேசிக்கொண்டிருந்தோம். நுரைக்குள்ள காத்து இருக்கும்னு அப்பா சொல்லிட்டு,
"குட்டி, வடிவம் இல்லாதது எது தெரியுமா?"ன்னு கேட்டாங்க.
வடிவம்னாலே வட்டம், சதுரம், முக்கோணம் இப்படித்தானெ புத்தகத்தில போட்டிருக்கும்? வடிவம் இல்லாததுன்னா? யோசிச்சுட்டு சொன்னேன்,
"மனுஷங்க".
அப்பா சிரிச்சாங்க. எப்படியாச்சும் காத்துங்கிற பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டுப்பிடனும்னு நெனச்சாங்களோ என்னவோ, அப்பா அடுத்து கேட்டாங்க,
"சரி, பார்க்க முடியாதது எது?" (எதை?)
நா சொன்னேன்,
"இருட்டு."
"சரியான விடைதான்"னுஅப்பா சிரிச்சிட்டு நுரைக்குள்ள காத்து இருக்கும்னு மறுபடியும் கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

Sunday, August 20, 2006

தண்ணி விளாட்டு

அப்பாவும் நானும் ஒரு விளாட்டு விளாடுவோம். அது பேரு தண்ணி விளாட்டு. அது எப்படின்னா, அப்பா சொல்லுற எல்லா வார்த்தைகளையும் நா திரும்பவும் சொல்லனும். ஆனா அப்பா 'தண்ணி' அப்படின்னு சொன்னா மட்டும் சொல்லிறக் கூடாது. சொல்லிட்டேன்னா அப்பா 'தம்பி நல்லா மாட்டிக்கொண்டார்'ன்னு சொல்லிக்கிட்டே என்னைக் கிச்சு கிச்சு பண்ணிடுவாங்க. நா கவனமா இருந்து 'தண்ணி'ன்னு சொல்லிடாம 'No'ன்னு சொல்லிட்டேன்னா 'தப்பிச்சாருய்யா'ன்னு சொல்லுவாங்க. எனக்குத் தப்பிக்கிறது விருப்பம். அப்புறம் மறுபடியும் அப்பா நிறைய வேற வேற வார்த்தையெல்லாம் சொல்லுவாங்க. நா திருப்பிச் சொல்லுவென், ஆனா கவனமா 'தண்ணி'யே சொல்லாம தப்பிச்சுருவென்.

Saturday, August 19, 2006

துடுப்பிடு துடுப்பிடு

ஏரிக்குப் போன அன்றைக்கு நாங்க எல்லாரும் துடுப்புப் படகில போனோம். அப்பொ ஒரு பாட்டுப் பாடினொம். அதான் துடுப்பிடு பாட்டு. அதைக் கேட்க இங்கெ அழுத்துங்க. அதோட ஆங்கில ஒலியைக் கேட்க இங்கெ அழுத்துங்க.

(இந்த வார நட்சத்திரமாக மழலையைத் தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், மறுமொழிகளில் ஊக்குவித்த நண்பர்களுக்கும் நன்றி!)

கடற்கரைக்குப் போனோம்

நாங்க கடற்கரைக்குப் போனோம். நா எப்போதும் என்னோட கொட்டுவண்டியைக் கொண்டு போவென். போயி அதில மண்ணை அள்ளி அள்ளி ஓட்டிக்கொண்டுபோய் கொட்டுவேன். ஏன்னா கட்டுமான வேலைக்கெல்லாம் மண்ணு வேணுந்தான? எங்கெ கட்டுமான வேலை நடக்குது எண்டு அப்பா கேட்டாங்க. பெங்களூரில எண்டு சொன்னென்.

ஒரு லாடநண்டு (horse-shoe crab) பாத்தென். அது செத்துப் போனது. கடிக்காது. தொட்டுப் பாத்தென். சில நேரம் அசையாம தரையில மல்லாந்து கிடக்கும். எடுத்து தண்ணியில போட்டா ஓடிப் போயிடும். அப்பா திருப்பிப் போட்டாங்க. அது நகரவே இல்ல.


நா மணல்ல கோடு போட்டென். அப்பா 'அ' போட்டாங்க. என்னிட்ட 'ம' எழுதுறீங்களா எண்டு கேட்டாங்க. எழுதினென்.

ஆனா அப்புறம் சொன்னதையெல்லாம் எழுதாம ஓடிப் போயிட்டென். நா என்னோட கொட்டு வண்டியோட விளையாண்டென். அப்புறமா அம்மாவுக்கு ஒரு ஆச்சரியம் கொண்டு வந்தேன். அது ஒரு நண்டுக்கால்.

Friday, August 18, 2006

டெய்சிக்குப் புத்தகம் விருப்பம்

அம்மா என்னை நூல் நிலையத்துக்கு கூட்டின்னுப் போனாங்க. அண்டைக்குத்தான் கோடைகால நிகழ்ச்சிகளின் கடைசி நாள். கோடைகாலத்தில நானும் அம்மாவும் சேர்ந்து 56 புத்தகங்கள் வாசித்தோம். எனக்கு ஒரு சான்றிதழும் கொடுத்தாங்க. அன்றைக்கு நூல் நிலையத்துக்கு டெய்சியும் வந்தாங்க. டெய்சி ஒரு பன்றி. அதுக்கு 12 வயசாம். கறுப்பா இருந்துச்சி. சின்ன பாப்பாக்களையெல்லாம் வச்சிருப்பாங்களே தள்ளு வண்டி, அதுல படுத்து தூங்கிட்டே இருந்திச்சி. அந்த பன்றிக்குட்டியேட அப்பா பேரு திரு மைனர் (படத்தில இருக்காங்களே அவங்கதான்). அம்மா பேரு திருமதி மைனர். ராத்திரியில அதோட அம்மா அப்பாவோடத்தான் தூங்குமாம். அதுக்கு புத்தகங்கள் வாசிக்க விருப்பமாம். அதோட அப்பா தினமும் நிறைய புத்தகங்கள் படிச்சுக் காட்டுவாங்களாம். டெய்சிக்கு விருப்பமான புத்தகங்களையும் கொண்டு வந்து வச்சிருந்தாங்க. டெய்சி மாதிரியே நாங்களும் படிக்கணுமாம். நா போறப்ப அது எந்த வித்தையும் காட்டல, எதுவும் பேசல. சும்மா தூங்கிட்டே இருந்திச்சு. என்னை மாதிரி நிறைய சின்ன பிளைங்கள் எல்லாம் வந்திருந்தாங்க. அதுக்கு நா முத்தம் கொடுத்தேன், கட்டியும் புடிச்சேன்.

Thursday, August 17, 2006

பாட்டு சிடி

வீட்டில இருக்க சிடி எல்லாத்தையும் எடுத்துக் கீழே போடுவென். எடுத்து வச்சிடுங்கன்னு சொன்னா எனக்கு முடியாது. அப்புறம் யாராச்சும் உதவி செஞ்சாத்தான் எடுத்து அடுக்கி வைப்பென். சிடி எண்டா குறுந்தகடு. Bryan Adams, Jewel, Carpentersன்னு மூனு சிடிக்கள் இருக்கு. அதை ஓயாம கேப்பென். அந்த சிடி அட்டையில இருக்க படங்களைப் பாத்துக்கொண்டே இருப்பென். அம்மாவும் அப்பாவும் எனக்கு நிறைய பாட்டுக்கள் பாடுவாங்க. தூங்கும்போது எல்லாரும் பாடுவோம். இப்ப ஒரு பாட்டு பாடப்போறென். பாட்டைக் கேட்க இங்க அழுத்துங்க.

Wednesday, August 16, 2006

என் கேள்விக்கு என்ன பதில்? -2

நா நிறைய கேள்வி கேப்பெந்தான. அண்டக்கிக் கேட்ட கேள்வியெல்லாம் ஒண்டாவது பாகத்தில இருக்கு. இதெல்லாம் ரெண்டாவது பாகம். இன்னம் நிறைய பாகங்கள் வரும். நல்லா பதில் சொல்லுற ஆக்களுக்கு எண்ட சொக்காவில (chocolate) கொஞ்சம் தருவென். பதில் சொல்லலையெண்டாலும் பிரச்சனை இல்ல :))

1. பழம் சாப்பிடும்போது ஏ விதையச் சாப்பிடக்கூடாது?
2. கத்தியால வெட்டும்போது ஏ வெட்டுப்படுது?
3. சாப்பிடும்போது எப்பிடி நசியிது?
4. ஏன் அம்மாக்கள்லம் லிப்ஸ்டிக் போடுறாங்க?
5. விதை எப்படி மரமா வளருது?
6. காட்டுல மரம் விழுந்தா ஏ இன்னொரு மரமும் விழுகுது?
7. இலங்கையில ஏ பிரச்சனை நடக்குது?

Tuesday, August 15, 2006

இண்டக்கிப் படம் போடுற நாள்

இது நா நேத்து வெட்டி ஒட்டினது. சும்மா. என்னவெண்டு தெரியாது.
இதா நா விரலால கீறின வானவில்

இது அப்பா வேலைக்கிப் போற மெப் (map)

Monday, August 14, 2006

மின்னி மின்னி விண்மீனே

அப்பா: குட்டி, நட்சத்திரம்னா என்ன?
நா: ஸ்டார்
அப்பா: நட்சத்திரம் என்ன செய்யும்?
நா: மின்னும்.
அப்பா: உங்களுக்கு நட்சத்திரமா இருக்கது விருப்பமா?
நா:இல்ல.
அப்பா: ஏன் குட்டி?
நா: ஏன்னா எனக்கு (நா) மின்னுறது விருப்பம் இல்ல.

அம்மா, "ஒரு நட்சத்திரப் படம் கீறுறீங்களா?" எண்டு கேட்டாங்க. நா கீறுனென். "இது finger painting அம்மா" எண்டு சொல்லிட்டு விரலால பெயிண்டை எடுத்துப் பூசினென்.
அப்பா: சரி மேல இருக்கது நட்சத்திரம், கீழ இருக்கது என்ன குட்டி?
நா: கோடு

மின்னி மின்னி எண்டு ஒரு பாட்டை அப்பா சொல்லித் தந்தாங்க. அந்தப் பாட்ட இங்கிலீஷ்ல இப்படிப் பாடுவாங்க. தமிழில இப்படி,

மின்னி மின்னி விண்மீனே
உன்னைக் கண்டு வியந்தேனே
உலகின் மேலே உயர்வானில்
வைரம் போலே மின்னுகிறாய்
மின்னி மின்னி விண்மீனே
உன்னைக் கண்டு வியந்தேனே.

நா பாடுறது கேக்குதா?

Sunday, August 13, 2006

ஒரு தாத்தா வந்தாங்க

(மழலையை இந்த வாரத்துக்கு நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த தமிழ்மணத்துக்கு எங்கள் நன்றி! முன்னாள் நட்சத்திரங்களைப் போலக் கணதியாக மழலைக்கு எழுதத் தெரியாது. எனவே குற்றம் குறைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும், நன்றி:-))

ஒரு தாத்தா வந்தாங்க
எங்க வீட்டில ஒரு புத்தகம் இருக்கு. அது திருக்குறள். அதில இருக்கவர்தான் திருவள்ளுவர் எண்டு அம்மாவும் அப்பாவும் சொன்னாங்க. சிலநேரம் அதைப் படிச்சுக் காட்டுவாங்க. ஒரு நாள் எங்க வீட்டுக்கு ஒரு தாத்தா வந்தாங்க. அவங்களுக்குப் பெரிய தாடி இருந்திச்சி. நா அவங்ககிட்ட கேட்டென், "நீங்கதான் திருவள்ளுவரா?" எல்லாரும் சிரிச்சாங்க. அந்தத் தாத்தா இல்லையெண்டு சொன்னாங்க. எனக்குத் திருக்குறள் தெரியுமா எண்டு கேட்டாங்க. நா ஆமா எண்டு சொல்லிட்டு,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

எண்டு சொன்னென். நீங்களும் கேளுங்க.

Saturday, August 12, 2006

உங்களுக்கு ஒரு ஆச்சரியம் வச்சிருக்கென்

நா வெளியில போகும்போது குச்சி, கல், இலை எல்லாத்தையும் பொறுக்குவென். அப்பாவொட போனா அம்மாவுக்கும், அம்மாவொட போனா அப்பாவுக்கும் கொண்டு வந்து "உங்களுக்கு ஒரு ஆச்சரியம் வச்சிருக்கென்" எண்டு சொல்லிட்டு அதைக் குடுப்பென். அதப் பாத்து அவங்க ஆச்சரியப்படுவாங்க. நன்றி சொல்லிட்டு வாங்கி வச்சுக் கொள்வாங்க. இண்டக்கி ல்யூலோட வெளியில விளாண்டென். அப்பாவும், ல்யூலொட அப்பாவும் பேசிக்கொண்டு நிண்டாங்க. நாங்க வண்டி ஓட்டினம், தண்ணியப் புல்லுல கொட்டி விளாண்டொம். பிறகு வீட்டுக்குள்ளாற போம்போது அம்மாவுக்கு ஆச்சரியம் ஒண்டு எடுத்தென். அது என்னெண்டா, தண்ணி போட்டு குழப்பின சேறு. அம்மாட்ட கொண்டு குடுத்தனா, அம்மா ரொம்ப ஆச்சரியப் பட்டாங்க.

Friday, August 11, 2006

1:20க்குத்தான் போவணும்


அப்பா மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தாங்க. நாங்க எல்லாரும் சாப்பிடும்போது, "அப்பா நீங்க எப்ப போவீங்க?"ன்னு கேட்டென்.
"1:20க்கு"ன்னு அப்பா சொன்னாங்க.
நா மைக்ரோவேவை திரும்பிப் பாத்தென். ஏன்னா அதுலதான மணி தெரியும்.
அப்பா சொன்னாங்க, "அதில 1 போட்டு ரெண்டு புள்ளி வச்சு 2க்கு அப்புறம் 0 வருமே அப்ப."
நா 1:20 வந்திடுச்சான்னு பாத்துக்கொண்டே இருந்தென். நாங்க சாப்பிட்டு முடிச்சிட்டு முன்னுக்குப் போயிட்டம். அப்புறமா நா வந்து மணியப் பாத்துப்போட்டு அப்பாட்ட சொன்னென்,
"இப்பதான் 1 போட்டு ரெண்டு ரெண்டு போட்டிருக்கு, இன்னும் 1:20 வரல."
அப்பா சொன்னாங்க "இல்ல குட்டி அப்படின்னா 1:20 ஏற்கனவே வந்துட்டுப் போயிடுச்சு."
நா சொன்னென், "இல்லப்பா நீங்க போக்கூடாது, 1:20 வந்த பிறகுதா போவணும்."

Thursday, August 10, 2006

எனக்குக் கோவமா வருது

அம்மாட்ட எனக்குத் தொலைக்காட்சி போடச் சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தென். அம்மா, "உங்க படம் வர்றப்ப போடுறென்" அப்படின்னு சொல்லிக்கொண்டே இருந்தாங்க. இப்ப வருமா, இப்ப வருமான்னு நா கேட்டுக்கொண்டே இருந்தென். அப்போ அம்மா சொன்னாங்க, "12 மணிக்குத்தா வரும்" எண்டு. நா சொன்னென், "அம்மா, எனக்குக் கோவமா வருது". அம்மா கேட்டாங்க, "கோவம் வர்றதுன்னா என்ன குட்டி?" நா சொன்னென், "எனக்கு இதயம் வேகமா அடிக்குது."

Wednesday, August 09, 2006

அம்புலி அம்புலி பாட்டு

ராத்திரி சன்னலால பாத்தமா. பெருசா அம்புலி இருந்துச்சு. அம்மா ஒரு பாட்டு சொல்லித் தந்தாங்க.

அம்புலி அம்புலி, எங்க போற?
ஓல வெட்ட.
ஏ ஓல?
பெட்டி உளைக்க.
ஏ பெட்டி?
காசு போட.
ஏ காசு?
மாடு வாங்க.
ஏ மாடு?
சாணி போட.
ஏ சாணி?
வீடு மொழுக.
ஏ வீடு?
சின்னப்புள்ள இருந்து விளையாட!


Tuesday, August 08, 2006

என்கிட்ட ஒரு வண்டு இருக்கு

அம்மா அப்பா நா எல்லாரும் நடக்கப் போனம். நா ஒரு குச்சிய கீழ கிடந்து எடுத்தென். குச்சிதான் என்னோட புல் வெட்ற எந்திரம். வழி ஓரத்தில இருந்த புல் மேல ட்ர்ர்ர்ருன்னு ஓட்டிக்கொண்டு போவென். கொஞ்சம் நேரத்தால அப்பா, "தம்பி, இங்க ஓடி வாங்களே ஒண்டு காட்டுறென்" எண்டு கூப்பிட்டாங்க. என்னவெண்டு போய்ப் பாத்தா அது ஒரு வண்டு. நா தொடலை. பயமா இருந்திச்சு. அது கடிக்குமா எண்டு கேட்டென். இல்லை அது செத்துப் போச்சு எண்டு கையில எடுத்துக் காமிச்சாங்க. அம்மா அதை ஒரு குப்பியில போட்டு வைக்கலாமெண்டு சொன்னாங்க. அந்த வண்டுக்கு ஆறு கால்கள். ரெண்டு பெரிய்ய கண்கள். 4 செட்டைகள். நாங்க அதைப் படம் எடுத்தோம். நா அதைத் தொட்டென். பிரட்டினனா, ஒரு காலில கொஞ்சம் உடஞ்சு போயிடுச்சு. இந்த வண்டை ஒரு பெட்டியில வச்சிருக்கிறன்.
இது என்ன வண்டு தெரியுமா? இந்த வண்டுக்குப் பேரு சிகாடாவாம் (Cicada). அப்படின்னா சுவர்க்கோழி
எண்டு அர்த்தமாம். இதுதான் ராத்திரியில க்ரிங்ங்ங்ங்ங் எண்டு சத்தம் போடுமாம். சத்தம் வருது, பாப்பமே எண்டு கிட்டக்க போனா கண்டு புடிக்கவே முடியாதாம். இதெல்லா எனக்கு எப்படித் தெரியும் எண்டு பாக்கிறீங்களோ? இயற்கை நேசி அண்ணாதான் சொன்னாங்க!

Monday, August 07, 2006

நிறைய மை பூசிட்டா...

அண்டக்கி சாந்தன் மாமாவும், அத்தை, கீர்த்தனா பாப்பா, இன்னும் இரண்டு அத்தைகள் எல்லாரும் வீட்டுக்கு வந்திருந்தாங்களா. எனக்கு ஒரு வண்ணப்பெட்டி, படங்கள் எல்லாம் கொண்டு வந்தாங்க. நேத்து நானும் அப்பாவும் அதிலயிருந்த அக்கா படத்துக்கெல்லாம் வண்ணம் தீட்டீனம். அப்போ நா எல்லா மையையும் கலந்து கலந்து நல்லா அந்தப் படங்களில தலையில இருந்து காலு வரைக்கும் பூசினன். அப்பா அந்தப் பக்கம் இருந்து இன்னொரு அக்கா படத்துக்கு மை பூசிக்கொண்டிருந்தாங்க. அப்போ பாத்தா என்னோட அக்காப்படத்தில அக்காவே தெரியல. மை மறைச்சிடிச்சு. எப்படி திரும்பவும் வெள்ளையாக்கிறது எண்டு பாத்தன். பக்கத்தில ஒரு பெரிய கிண்ணத்துல தூரிகையெல்லாம் கழுவுறதுக்காண்டி நிறைய தண்ணி வச்சிருந்தம். அதுல எல்லா அக்காக்களையும் ஒண்ணு ஓண்ணாப் போட்டு கழுவினன். அப்போ அம்மா சிரிச்சுட்டு கேட்டாங்க, "குட்டி என்ன செய்யுறிங்க?" எண்டு. நா, "அம்மா, எல்லா அக்காக்களும் swimming poolல குளிக்கிறாங்க" எண்டு சொல்லிப்போட்டு சிரி சிரி எண்டு சிரிச்சன். எல்லாரும் சிரிச்சாங்க. பிறகு அப்பாவும் அவங்க வண்ணம் பூசின படத்தைத் தண்ணியில போட்டுட்டாங்க. அதான் இந்தப்படம்.

எனக்கு நண்பர்கள் நாள் வாழ்த்துச் சொன்ன எல்லா நண்பர்களுக்கும், படம் போட்ட சிபி அண்ணாக்கும் நன்றி! உங்கள வாழ்த்துகிறன் :)

Friday, August 04, 2006

என் கேள்விக்கு என்ன பதில்?


நா நேத்து ராத்திரி அம்மாட்ட சொன்னேன், "அம்மா எனக்கு நான்கு கேள்விகள் இருக்கு."

அம்மா என்ன எண்டு கேட்டாங்க.

ஒண்டாவது கேள்வி: மரம் எப்படி சாப்பிடுது?
ரெண்டாவது கேள்வி: பூமி ஏன் சுத்துது?
மூண்டாவது கேள்வி: லைட்டைப் போட்டா ஏன் கண்ணு கூசுது?
நான்காவது கேள்வி: வயித்துக்குள்ள என்ன வேலையெல்லாம் நடக்குது?

அப்புறம் மொதல்ல கேட்ட இன்னொரு கேள்வி:
பூச்சியெல்லாம் செத்துப் போகும்போது ஏன் கக்கா போடுது?

உங்களுக்கு பதில் தெரியுமா?