மழலைச் சொல்

Saturday, August 23, 2008

டைடானிக் கதையின் நீதி

ராத்திரி தூங்கப் போகும்போது நா அப்பாவுக்கு ஒரு கதை சொன்னேன். அது டைடானிக் கதை. ஒரு கப்பல் செஞ்சாங்க. அதுக்கு 11 மாடி இருந்துச்சு. உள்ளே விளையாட்டு எல்லாம் இருந்துச்சு. இது மாதிரி கப்பலை யாரும் பாத்ததே இல்லன்னு சொன்னாங்க. ஒரு மிதக்குற நகரம்னு அந்தக் கப்பலைச் சொன்னாங்க. அது இங்கிலாந்துல இருந்து அமெரிக்காவுக்கு வந்துச்சு. அதுல நிறைய ஆக்கள் ஏறினாங்க. கப்பல் போகும்போது அதொட கேப்டன் ஒரு பெரிய பனிப்பாறையைப் பாத்தார். அப்போ அந்தக் கப்பலைத் திருப்பப் பாத்தார் ஆனா, திருப்ப முடியலை. கப்பல் அதுல போயி உரசிடிச்சு. கப்பல்ல இப்படி (கைகளைக் கோர்த்து வளைத்துக் காட்டி) ஒரு ஓட்டை வந்திடிச்சு. அதுக்குள்ள தண்ணி வந்திடிச்சு. கப்பல் இப்படி ஆடுது. இப்படி ஆடுது. அப்பறம் இப்படி இப்படி முழுகுது. அப்ப நிறைய ஆக்கள் கடலுக்குள்ள குதிச்சிட்டாங்க. லைப் போட்ல கொஞ்சம் பேரு ஏறிட்டாங்க. அடுத்த நாள் காலையில வரைக்கும் காப்பாத்த யாரும் வரலை. அப்புறமா ஒரு கப்பல் வந்திச்சு. அதுக்கு எல்லாரும் தீக்குச்சியைக் கொழுத்தி, பேப்பரை எரிச்சுக் காட்டுறாங்க. அந்தக் கப்பல் வந்து எல்லாரையும் காப்பாத்திடிச்சு.

கதை முடிஞ்சதும் அப்பா சொன்னாங்க, "ச்ச, ரொம்ப வருத்தமா இருக்கு, இல்ல?" நா சொன்னேன், "கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் மகிழ்ச்சி." அப்பா கேட்டாங்க, "ஏன் மகிழ்ச்சி?" அதுக்கு நா சொன்னேன், "வருத்தம் ஏன்னா அந்தக் கப்பல் மூழ்கிடிச்சு. மகிழ்ச்சி ஏன்னா காலையில இன்னொரு கப்பல் வந்து நிறைய ஆக்களைக் காப்பாத்திடுச்சில்ல, அதுக்கு."

இன்னக்கி எனக்கு நல்ல கனவா வரும்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டேன்.

இன்பம் துன்பம் எல்லாம் நம்ம பார்க்கிற விதத்திலதான் இருக்குன்னு அப்பாவுக்கு விளங்கியிருக்கும்!

Sunday, August 10, 2008

அதோ அந்தப் பறவை போல!


நானும் அப்பாவும் எங்களோட ரகசிய இடத்துக்குப் போனோம். அங்க சைக்கிள்லதான் போகணும். அங்க நிறைய மரங்கள், ஒரு ஏரி எல்லாம் இருக்கும். வெயில் அடிச்சிச்சா, அதனால நாங்க ஒரு மரத்துக்குக் கீழ நின்னோம். அப்ப நாங்க பேசிக்கிட்டோம்:

நா: இந்த ஏரியில குளிக்க முடிஞ்சா நல்லா இருக்கும்.
அப்பா: இங்க நீங்க ஆத்துல, ஏரியில குளிக்க முடியாது. ஏன்னா சில நேரம் முதலைகள் இருக்கும். ஆனா இந்தியாவுல, ஈழத்துல நீங்க குளிக்கலாம்.
நா: ஆனா ஈழத்துக்கு நம்ம போக முடியாதே.
அப்பா: ஆமா இப்ப சண்டை நடக்குது. அங்க கூடாத ஆமி நிக்கிது. குண்டெல்லாம் போடுவாங்க. அதனால போமுடியாது.
நா: சண்டை எப்ப முடியும்?
அப்பா: தெரியாது குஞ்சு. புலிகள் எல்லாம் அந்த கூடாத ராணுவத்தை விரட்டின பிறகுதான் அங்க இருக்கவங்க எல்லாம் நிம்மதியா இருக்கலாம். குளத்தில போயி குளிக்கலாம்.
நா: எனக்கு அந்த கூடாத ஆமி மேல விருப்பம் இல்ல. குண்டு போடுறது விருப்பம் இல்ல.
அப்பா: எல்லாருக்கும் அதுதான் குஞ்சு வேணும். உலகத்துல சண்டை இல்லாம, வெடி குண்டு இல்லாம, எல்லாரும் அன்பா இருக்கணும்.
நா: நா பெரிய பிள்ளையா வந்த பிறகு ஒரு recycle ஆளா மாறி, எல்லா fighter jets, வெடிகுண்டு எல்லாத்தையும் உருக்கிடுவேன்.
அப்பா: குஞ்சு, அதுக்கு நீங்க recycle ஆளா வரக்கூடாது. ஒரு பெரிய political scientist அல்லது
நா: ஒரு கவர்னர் அப்படி.
அப்பா: ஆமா, ஒரு பெரிய அதிகாரம் இருக்கணும் அப்பதான் 'நமக்கு இந்த துப்பாக்கி, குண்டு எல்லாம் வேண்டாம், அமைதியா இருப்போம்னு சொல்லி எல்லாத்தையும் தூக்கிப் போடலாம்.
நா: ஆமா, ஆமா. நா சொல்லுவேன், we do not want fighter jets, we dont want bombers, no more guns, thank you.
அப்பா: நல்லது குஞ்சு. அதுக்குத்தான் நான் சொல்லுவேன் நீங்க துப்பாக்கி விளையாட்டு விளையாடக் கூடாதுன்னு.
நா: சரி அப்பா, நா இப்ப மூணு வார்த்தை சொல்றேன், I Dont Like Guns. Actually அப்பா, அது நாலு வார்த்தை.

அப்புறமா நாங்க வீட்டுக்கு வந்துட்டோம். வீட்டுல விளாடும்போது நா "ஒரே வானிலே, ஒரே வானிலே" அப்படின்னு பாடினேன். எங்க கேட்டிங்க இந்தப் பாட்டைன்னு எல்லாம் கேட்டாங்க. நா ஒரு பஸ்சில் அந்தப் பாட்டைக் கேட்டேன். நீங்களும் கேளுங்க!