மழலைச் சொல்

Monday, October 23, 2006

எனக்குப் பிடிச்ச நிறங்கள்

காகிதத்துல நா ஒரு சித்திரம் கீறத் தொடங்கினேன். கொஞ்சம் வண்ணத்தைப் பூசிட்டு அப்படியே மேசை மேலயே விட்டுட்டேன். அப்புறம் அடுத்த நாள் கொஞ்சம் பூசினேன். அதற்கடுத்த நாளும் கொஞ்சம். இப்படி மூண்டு நாள் அந்தச் சித்திரத்தைக் கீறினேன். கீறி முடிச்சுட்டு அந்தக் காகிதத்தை எடுத்து அதில் என் வண்ணப் பெட்டியை வைத்துச் சுற்றினேன். அப்பா அதற்குள் ஓடி வந்து அந்தக் காகிதத்தைக் கசக்க வேண்டாமெண்டு சொல்லிட்டு,
"ஆமா இதுல என்ன கீறினீங்க?"ன்னு கேட்டாங்க.
"அதா, அது ஒன்னும் இல்ல, அதெல்லாம் எனக்குப் பிடிச்ச நிறங்கள்" அப்படின்னு சொன்னேன்.
அப்புறம் நீளமா இருந்தவொரு கோட்டைக் காட்டி, "இது என்ன?"ன்னு கேட்டாங்க, நா சொன்னேன், "அது சிவப்பு." அதைக் கேட்டுட்டு அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா எல்லாம் சிரிச்சாங்க.

Wednesday, October 18, 2006

ஒரு பெரிய பையனின் படுக்கை

என்னைச் சின்னப் பிள்ளைன்னு சொன்னா எனக்குப் பிடிக்காது. ஏன்னா நா பெரிய பையனா வந்திட்டேன். சின்னப் பிள்ளைங்களோட பொம்மையெல்லாம் பாத்தா "இதெல்லாம் சின்னப் பிள்ளைங்க விளாடுறது"ன்னு சொல்லுவேன். நா ஒரு நாள் பாட்டியோட இருந்து American Funny Videos பாத்தேன். அப்புறம் ராவில தூங்கப் போறப்ப அம்மா கேட்டாங்க, "குஞ்சு நீங்கதான் பெரிய பிள்ளையா வந்துட்டீங்க, பெரிய ஆக்களோட டி.வி ப்ரோக்ராம் எல்லாம் பாக்குறீங்க, அப்புறம் ஏன் நீங்க பெரிய பிள்ளைங்க மாதிரியே உங்களோட கட்டில்ல தனியாப் படுக்கக் கூடாது?" இது எனக்குக் கொஞ்சம் கஷ்டமான வேலை. அது என்னை மாதிரியே வளருற படுக்கைதான். நா சின்னப் பிள்ளையா இருந்தப்ப சின்னதா இருந்திச்சு, பெரிய பையனா வந்தப்புறம் பெரிசாயிடுச்சு. ஆனாலும் எனக்கு அப்பாம்மாவோட சேர்ந்து தூங்கத்தான் விருப்பம். தூங்கினப்புறம் தனியே தூக்கிப் போட்டாலும் நடுவில முழிச்சு ஓடி வந்துடுவேன். அப்ப நா சொன்னேன் "அம்மா, நா அதைப் (வீடியோவை) பாக்கணும்னு பாக்கலை, சும்மாதான் பாத்தேன்". அப்புறம் சொன்னேன் "அம்மா, நீங்களும் அப்பாவும்தான் உலகத்திலயே நல்ல அம்மா அப்பா." என்ன சொன்னா என் வேலை நடக்கும்னு எனக்குத் தெரியும்!