மழலைச் சொல்

Tuesday, February 28, 2006

அவர்கள் சொல்வதும், நான் செய்வதும்

அப்படிச் செய்யக் கூடாதென்று அம்மாவும் அப்பாவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் மறுபடியும் அதைச் செய்தேன். அதுதான், செடி வைத்திருக்கும் அந்தத் தொட்டியிலிருந்து மண்ணைத் தோண்டித் தோண்டிக் கீழே இறைப்பதும், இறைந்த மண்ணின் மீது என் வண்டிகளை ஓட்டி விளையாடுவதும்தான். இரவு அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் சாப்பிட்டு முடித்துக் கைகழுவ எழுந்து வந்தேன். கையைக் கழுவிவிட்டு என்ன செய்யலாம் எனச் சுற்றும் முற்றும் பார்த்த போது அந்தச் செடித் தொட்டியில் இருந்த மண் அள்ளு அள்ளு என்று என்னைக் கூப்பிட்டது. மண்ணை அள்ளி அள்ளிக் கழுவுதொட்டியில் (sink) போட்டேன். கூடவே சில கூழாங்கற்களையும் போட்டேன். தொட்டியில் தண்ணீர் நிரம்பிக் கறுப்புத் தண்ணீரானது. நான் இன்னும் நிறைய மண்ணைக் கொட்டி நன்றாகக் கறுப்பாக்கினேன். தண்ணீர் நிரம்பிக் கொண்டே வந்து வழியத் துவங்கிய போது உதவி உதவி என்று கத்தினேன். அப்பா வந்து பார்த்தார். பின்னாலேயே அம்மாவும் வந்தார். என்னைக் குளியலறையை விட்டு வெளியே போகச் சொன்னார்கள். அப்பா கழுவுதொட்டிக்குக் கீழேயிருந்த சாமான்களை வெளியே எடுத்துவிட்டு அந்தக் குழாயையெல்லாம் கழற்றி, குச்சியை விட்டுக் குத்தியபோது கறுப்புத் தண்ணீர் இறங்கியது. கூழாங்கற்களையும், நான் அவ்வப்போது உள்ளே போட்டிருந்த பேப்பர், க்ரேயான் எல்லாவற்றையும் அப்பா எடுத்துக் காட்டினார். அவர் கோபமாயிருந்தது போலத் தெரிந்தார். அம்மா அந்த இடத்தையெல்லாம் துடைத்துக் கூட்டிச் சுத்தம் செய்தார். அப்பா என்னை உட்கார வைத்து, "இப்படிச் செய்ய வேண்டாமென்று எத்தனை முறை சொல்வது?" என்று கேட்டார். "நா இனிமே ச்செய்யல,"ன்னு வழக்கம் போலச் சொன்னேன். "சரி உட்கார்ந்து படிக்கலாம்"ன்னு சொல்லிட்டார். நான் அடம் எதுவும் செய்யாமல் ஒழுங்காக உட்கார்ந்து படித்தேன். அமைதியாக இருந்தேன். படுக்கப் போகும்போது அப்பா அம்மாவிடம் சொன்னார், "இப்பதான் தம்பி சொல்றதக் கேக்குறார்." உடனே நான் சொன்னேன், "ஆனா நா வருத்தமா இருக்கேன்." அவர்கள் என்னை முத்தமிட்டார்கள். அதற்கப்புறம் நாங்கள் உறங்கச் சென்றோம்.
இன்றைக்கு இந்தப் படத்தை வரைந்தேன். அப்பா வேலையிலிருந்து வந்ததும் பார்த்தார். கப்பல் என்றேன். தீ வந்தால் தண்ணீர் அடிக்கும் கப்பல் என்றேன். அதோ அந்த நீல நிறக் குழாய்தான் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் என்றேன். அப்பாவும் அம்மாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் என் அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னவா? செய்து முடித்தவுடன்தானே எனக்கே தெரியும்!

Monday, February 27, 2006

கொழுக்கட்டைப் பாட்டு

அப்பா ஒரு கொழுக்கட்டைப் பாட்டு சொல்லித் தந்தாங்க-

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?

மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?

பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.

அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?


-அதான் பாட்டு.
இதான் அம்மா அவிச்ச கொழுக்கட்டை!
ஆனா இது வெந்த கொழுக்கட்டை. அதனால சாப்பிடும்போது நான் பாடுனென்:
கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ வெந்துட்டிங்க?
மழையே பெய்யல வெந்துட்டென்!

Sunday, February 26, 2006

தரைபடம்

நா படம் வரஞ்சு கொண்டிருந்தென். கொஞ்ச நேரத்தால தூரிகைய வச்சிட்டென். படத்து மேல என் காரை ட்ர்ர்ர் ட்ர்ர்ர் அப்படின்னு ஓட்டினென். அப்பிடியே நிறமெல்லாம் சக்கரத்துல பட்டு, தரைக்கும் போயிருச்சு. அட, இது என்னடா புது மாதிரியான படமா இருக்கேன்னு அம்மா சொன்னாங்க.

Saturday, February 25, 2006

என்ன கெழமை?

நா தினமும் காலையில எந்திருச்சு வரும்போது அப்பாட்ட என்ன கேப்பென்...
அப்பா இன்னக்கி ஞாயித்துக் கெழமையா?
இன்னக்கி உங்களுக்கு மீட்டிங் இருக்கா?
இன்னக்கி நீங்க வேலைக்குப் போணுமா?
ஏன்னா அப்பா சனிக் கெழமை, ஞாயித்துக் கெழமைதான் வீட்டுல இருப்பாங்க. அப்பா வீட்டுல இருந்தா எனக்குச் சந்தோஷம். அதுக்காண்டிதான் அப்படிக் கேப்பென்.

Friday, February 24, 2006

சொல்லுடைப்பு

நா: Iceன்னா என்ன?
அம்மா: விழுந்த பனியெல்லாம் உருகி, உறைஞ்சு கட்டி கட்டியா இருக்குமே அதான் ஐஸ்.
நா: Airன்னா என்ன?
அம்மா: Airன்னா காத்துன்னும் சொல்லலாம்; இதோ மேல இருக்கு பாருங்க வெளி, அந்தரம் அதுன்னும் சொல்லலாம். ஏன் கேக்குறீங்க?
நா: LandAirன்னா என்ன?
அம்மா: LandAirஆ?
நா: ஆமா, LandAir. IceLandAirன்னு வருமே அதான் அந்த LandAirன்னா என்ன?
அம்மா: ஓ, குட்டிப் பையா, அது ஐஸ்லாண்ட் அப்படின்னு ஒரு நாடு இருக்கு, அங்க நிறைய்ய்ய ஐஸ் இருக்கும், அந்த நாட்டோட விமானத்துக்குப் பேருதான் IceLandAir!

அம்மாவும் அப்பாவும் IceLandAir அப்படின்னு என்னைக்கோ பேசிக்கிட்டாங்க. அதைப் பத்தித்தான் கேட்டென்.

Thursday, February 23, 2006

இதான் நா!

திரு சகா என்னோட போட்டோ கேட்டாங்க. அவங்களுக்காக இது.
இதுல இருக்கதுதான் க்யூரியஸ் ஜார்ஜ். அது நல்லா குறும்பு செய்ற குட்டிக் குரங்கு. எனக்கு க்யூரியஸ் ஜார்ஜ் விருப்பம். அதனால அம்மாவும் நானும் இந்த மொகமூடி செஞ்சம். அதுக்குள்ள இருக்கதுதான் நா.

Wednesday, February 22, 2006

தூக்கத்திலயும் கேள்வி கேப்பென்

நா தூக்கத்தில பிரண்டு படுத்தென்.
"தம்பி, எந்திருச்சு ஒன்னுக்கிருந்துட்டு வந்து படுத்துக்கங்க," அப்படின்னு அப்பா கூப்பிட்டாங்க.
நா "ஏன்?" அப்படின்னு கேட்டேன்.
நான் தூக்கத்துல உளருறென்னு அப்பா நெனச்சுக் கொண்டு, மறுபடியும்
"தம்பி, எந்திருச்சு ஒன்னுக்கிருந்துட்டு வந்து படுத்துக்கங்க"ன்னு சொன்னாங்க.
நா விளக்கமா "ஏன் ஒன்னுக்கிருந்துட்டு வந்து படுத்துக்கனும்?"னு கேட்டென்.
அப்பா சொன்னாங்க, "அப்பதான் படுக்கை நனஞ்சு போவாது."
நா, "சரி," ன்னு சொல்லிட்டுப் போய் ஒன்னுக்கிருந்துட்டு வந்து தூங்கிட்டென்.
நா கேட்ட கேள்வில நட்டநடு ராவையில அப்பாவுக்கு வெடுக்கெண்டு முழிப்பு வந்துடுச்சாம் - விடிஞ்சு பேசிக்கொண்டாங்க.

Monday, February 20, 2006

போலீஸ் கார்

வீட்டுக்கு முன்னுக்கு ஒரு பச்சை கார் வந்து ஆண்ட் சிண்டியோட வெள்ளை காரை மோதிருச்சு. கிறீன்னு சத்தம் கேட்டுச்சு. போலீச கூப்புடுங்க போலீச கூப்புடுங்கன்னு அப்பா டெலிபோனை எடுத்து கால் பண்ணினாங்க. அப்புறம் ஆம்புலன்ஸ், போலீஸ் கார், தீ வண்டி எல்லாம் வந்துச்சு. யாருக்கும் அடி படலன்னு சொன்னாங்க. நா பாத்துக்கிட்டே இருந்தேன். அப்புறம் அப்பா போட்டோ எடுக்கச் சொன்னாங்க. அம்மா ப்ளாஷ் இல்லாம எடுங்கன்னு சொன்னாங்க. நா எடுத்தேன். இப்படி வந்துச்சு. அப்புறம் அப்பா கேமராவை அசையாம பிடிச்சுக்கிட்டாங்க, நான் அமுக்கினேன். அப்புறம் எல்லா வண்டியும் போயிருச்சு. பாத்தீங்களா போலீஸ் கார் லைட் அடிச்சுக்கிட்டு நிக்குது!

Sunday, February 19, 2006

குக்கி

நா அம்மாட்ட குக்கி கேட்டென். அம்மா செய்யலாமே எண்டு சொன்னாங்க. கடைக்குப் போய் மா, chocolate chips எல்லாம் வாங்கிட்டு வந்தோம். அம்மாவுக்கு நான் குக்கி பண்ண உதவி செஞ்சென். ஏன்னா நாந்தான் சின்ன சமையல்காரர். அம்மா மாவுக்குள்ள சீனி, முட்டை, சக்கரை, உப்பு, baking soda எல்லாம் போட்டாங்க. நா நல்லா கலக்கு கலக்கு எண்டு கலக்கினேன். அம்மா ட்ர்ர்ர்ன்னு சுத்துதுல்ல அதக் கொண்டு கலக்கினாங்க. நா மாவப் போட்டென். chocolate chips ஐயும் சேர்த்துக் கலக்கினோம். நா கொஞ்சம் chocolate chipsஐ சும்மாவே சாப்பிட்டென். குக்கி மாவ தட்டுல வச்சு அவன்ல வச்சு பேக் பண்ணினோம். அவனை சின்னப் பிள்ளைங்கள் தொடுறது இல்ல. சுட்டுறும். பெரியாக்கள் மட்டுந்தான் தொடணும். கொஞ்ச நேரத்தில அவனைத் தொறந்து பார்த்தா குக்கி வட்ட வட்டமா வந்திருச்சி.சாப்பிட்டு பாத்தன்... ம்ம்ம்ம்ம்ம் யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மீ. ஆனா நிறையச் சாப்பிட்டா கீரைப் பூச்சி கடிக்கும்.

Saturday, February 18, 2006

சோர்வம்

நா நேத்து ஷூ ராக்லேருந்து எல்லா ஷுவையும் கீழ தள்ளிட்டேன். அப்பா எடுத்து வைக்கச் சொன்னாங்க. என்னால எடுத்து வைக்க முடியாதேன்னு சொன்னேன். அப்பா ஏன்னு கேட்டாங்க. நான் சோர்வமா இருக்கேன்னு சொன்னேன். கொஞ்சம் சோகமா, கொஞ்சம் சோர்வா இருக்கதுதான் சோர்வம். அப்பா கண்டிப்பா எடுத்து வைக்கச் சொல்லிட்டாங்க. நான் எல்லா ஷூவையும் எடுத்து வச்சிட்டேன். அப்புறம் சோர்வமாவே இல்ல.

Thursday, February 16, 2006

பொழுதொரு பேண்டேஜ்


கதவுக்கு வெளியில பபுள் ஊதுற சோப் இருந்துச்சா, அதை எடுக்கப் போனேன். கதவைத் திறந்தனா, அப்பிடியே கதவு என் கால்ல அடிச்சிருச்சு. கால்ல அடிச்சு ரத்தம் வந்து, தோல் உரிஞ்சு புண் வந்துருச்சு. நடந்தா வலியும் கூடவே வருது. அம்மா மருந்து போட்டு பேண்டேஜ் போட்டாங்க. இப்ப கால் வலிக்கலை.

Wednesday, February 15, 2006

திமிங்கிலம்


நா ஒரு படம் வரஞ்சேன். அப்பா திமிங்கிலம் மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. அம்மா ஆமா அந்தத் திமிங்கிலம் சுத்தி சுத்திப் பாய்ஞ்சு விளையாடுதுன்னு சொன்னாங்க.

Monday, February 13, 2006

வீட்டுக்குள்ள பனி


இப்பதான் பனியில விளையாடிட்டு வர்றோம். என்னோட கொட்டு வண்டியைக் கொண்டு போனேன். அதுல நிறைய பனியை அள்ளி அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்லேருந்து ல்யூலும் வந்தார். அவரும் நானும் கத்திக் கொண்டே ஓடுனோம். பனியில ஓட முடியாம விழுந்துட்டோம். அப்புறம் வீட்டுக்கு வரும்போது ஒரு கொட்டு வண்டி நிறைய பனியை அள்ளிக் கொண்டு வந்தோம். பாத்ரூம்ல வச்சு எறிஞ்சு எறிஞ்சு விளையாண்டேன். வீட்டுக்குள்ளயும் கொண்டு வந்து எறிஞ்சேன். அது தண்ணியாப் போச்சு. அப்புறம் ஓடும்போது அதுல வழுக்கி விழுந்துட்டேன். கொஞ்சம் வலிச்சது. இப்ப வலிக்கலை. அப்புறமா அந்தத் தண்ணியையெல்லாம் நாங்க தொடச்சிட்டோம்.

Sunday, February 12, 2006

பனி மனிதனின் மூக்கு



வீட்டுக்கு வெளியில நிறைய பனி பெஞ்சிருக்கு. எனக்குப் பனி, குளிர் எல்லாம் நல்ல விருப்பம். "அப்பா வெளியால போய் பனி மனிதன் செய்யலாமா" எண்டு கேட்டேன். அப்பா ஆமா சொன்னாங்க. பனி மனிதனுக்கு எப்படி மூக்கு வைக்கலாம் எண்டு கேட்டாங்க அம்மா. உடன நா fridgeஅ திறந்து இந்த மரவள்ளிக் கிழங்க எடுத்து இதான் மூக்கு எண்டேன். அம்மாவும் அப்பாவும் சிரிச்சாங்க.

Saturday, February 11, 2006

அம்மா, அப்பா, நான்



அம்மாவோட சேந்து ஒரு படம் கீறினேன். அதுல அம்மா, அப்பா, நான் மூனு பேரும் இருக்கோம். நீளமா, உயரமா இருக்கது அப்பா. அப்பாவுக்கு மீசை வரஞ்சேன். பக்கத்துல இருக்கது அம்மா. அம்மாவுக்கு சிவப்பு நிறத்துல லிப்ஸ்டிக்கும், நெய்ல் பாலிஷும் வரஞ்சேன்.
குட்டியா இருக்கது நான்.

Friday, February 10, 2006

வண்டி பாக்குறேன்


எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு ரோட் இருக்கு. அதுல போற வண்டியெல்லாம் பாப்பேன். ஆம்புலன்ஸ், தீவண்டி, போலீஸ் கார் எல்லாம் ஊஊஊன்னு சத்தம் போட்டுக்கிட்டு, லைட் அடிச்சுக்கிட்டே போவும். சில நேரம் வீட்டுப் பக்கம் வராம வேற ரோட்ல போயிரும். எங்கயோ தீப் புடிச்சுருச்சு, யாருக்கோ உடம்புக்கு முடியல, அதான் எல்லாம் போவுதுன்னு சொல்லுவேன். நா சன்னலுக்கு வர்றதுக்குள்ள அதெல்லாம் போயிருச்சுன்னா மிஸ் பண்ணிட்டனேன்னு அழுவேன். அப்புறம் அழமாட்டேன். அன்னக்கி ஒரு நாள் பெரியம்மா, பெரியப்பாவெல்லாம் வந்தப்ப சூடம் கொளுத்துனோம். அப்போ புகை வந்து அந்த பயர் அலார்ம்ல பட்ருச்சு. உடனே வீ வீன்னு பயர் அலார்ம் சத்தம் போட்டுச்சு. மூனு தீ வண்டி வந்துச்சு. ஒரு தீயணைப்பு மாமா வீட்டுக்கு வந்து புகை வருதான்னு கேட்டார். நான் சன்னல்ல இருந்து தீ வண்டியைப் பாத்துக்கிட்டே இருந்தேன்.

Thursday, February 09, 2006

தக்ஷா


நானும் அப்பாவும் பனிக்கரடி விளாட்டு விளாண்டோம். அப்பா பெரிய கரடி. நா குட்டிக் கரடி. சோபாவெல்லாம் கட்டிப் பனி. பனியை எம்பி எம்பி ரெண்டு கையாலயும் அடிச்சு உடைச்சோம். உள்ளே மீன் நண்பர்கள் இருந்தாங்க. ஹலோன்னு அப்பா அவங்ககிட்ட பேசினார். அவங்க எங்கயோ வேற கடல்லேருந்து வர்றாங்கன்னு அப்பா சொன்னார். நானும் ஒரு பனிக்கட்டிய ஒடச்சேன். பாத்தா ஒரு மீன் நண்பர் இருந்தார். நானும் ஹாய் சொன்னேன். என் காதுல கைய வச்சுக் குவிச்சு மீன் சொல்றதை உத்துக் கேட்டேன். அப்பாட்ட திரும்பி, "இந்தியாவுலேருந்து வர்றாங்களாம்,"னேன். அப்பா பேர் என்னவாம்னு கேட்டார். நா மீனக் கேட்டேன். மறுபடியும் காதுல கை வச்சு உத்துக் கேட்டுட்டுச் சொன்னேன், "தக்ஷா." நல்ல பேரு குட்டிக் கரடியேன்னார் அப்பா. எப்படி இந்தப் பேரைக் கண்டு புடிச்சேன்னு அப்பாவும் அம்மாவும் கேட்டுக்கிட்டாங்க. நா அடுத்த பனிக்கட்டிக்குத் தாவுறேன்.

படத்துல இருக்கது, முந்தி ஒரு நா, என் சட்டையில நானே கீறிக்கிட்ட மீன்.

Wednesday, February 08, 2006

ய்ய்யம்மி தயிர்


உங்களுக்குத் தயிர் புடிக்குமா? என் அம்மாவுக்குக் கொஞ்சம் புடிக்கும். அப்பாவுக்கு நல்லா புடிக்கும். ஆனா எனக்கு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாப் புடிக்கும். அம்மா வீட்டில செய்யிற தயிர், கடையில வாங்குற தயிர், இனிக்குற தயிர், இனிக்காத தயிர், எல்லாம் புடிக்கும். நா தயிர வித்தியாசமா வித்தியசமா சாப்பிடுவன். சோறுல போட்டு உப்பு போட்டு சாப்பிடுவன். oatmeal செஞ்சி அதுல தயிர் போட்டு சாப்பிடுவன். இட்லில போட்டு சாப்பிடுவன். தயிர் போட்டா அந்தத் தட்டில குழம்பு போடக் கூடாது. ஏன்னா தயிர் மஞ்சளாப் போயிடும். அது எனக்கு விருப்பமில்லாதது. அம்மா சாதத்தில தயிர் போட்டு சக்கரைப் போட்டு உப்புப் போட்டு சாப்பிடுவாங்க. ஆனா எனக்கு சக்கரைப் போடாம சாப்பிடுறதுதான் புடிக்கும். அதுதான் தெம்பு. எனக்கு எப்பவும் தயிர் சாப்பிட விருப்பம். ஆனா ராத்திரில சாப்புடக்கூடாதுன்னு சொல்றாங்களே.

Tuesday, February 07, 2006

அங்காடி ரயில்



நானும் அம்மாவும் mallக்கு போனோம். Mallக்குத் தமிழில அங்காடி எண்டு சொல்லி கொடுத்தாங்க. அங்க ஒரு சிவப்பும் பச்சையும் சேர்ந்த ரயில் ஒன்டு இருக்கு. என்ன மாதிரி சின்ன பசங்கல்லாம் வந்து அந்த ரயிலில போவாங்க. அந்த அங்காடிக்கு போவும் போதெல்லாம் அதுல ஏறிப் போவன். என்னோட பெரியப்பா எங்க வீட்டுக்கு வந்தப்போ எனக்கு நிறைய ரிக்கட் வாங்கிக் கொடுத்தாங்க. இன்டைக்கும் போனன். நா எப்பப் பார்த்தாலும் எந்திரத்திலதான் ஒக்காருவேன். அப்பத்தான் எல்லாம் நல்லாத் தெரியும். நீங்களும் அங்காடிக்குப் போய் ரயில்ல போங்க, முன்னாடி இருந்து போங்க. அரும்ம்மையா இருக்கும். see you later.

Monday, February 06, 2006

நீங்க வச்சிருக்கீங்க


நா புது தாமஸ் ச்சூச்சூ ட்ரெயின் புக்ல
படம் பாத்தேன். என்ன வாங்கலாம்னு பாத்தேன். எனக்கு ஒரு டீசல் வாங்கனும்னு விருப்பமா இருந்துச்சு. "தாமஸ் ச்சூச்சூ ட்ரெயின் கடைக்குப் போலாமா?"ன்னு அப்பாவைக் கூப்புட்டேன். "தாமஸுக்குத் தனியா கடையில்லை,"ன்னு அப்பா சொன்னார். அந்தப் புத்தகத்துல போன் நம்பர் இருந்துச்சு. நா போனை எடுத்துட்டு வந்து, "கால் பண்ணுவோம்,"னு சொன்னேன். "நீங்களே கூப்புடுங்க,"ன்னு அப்பா சொன்னார். "சரி, கூப்பிட்டு என்ன கேப்பீங்க?"ன்னு அப்பா கேட்டார். "i want buy one dieselன்னு கேப்பேன்,"னு சொன்னேன். "காசு கேப்பாங்களே, என்ன செய்வீங்க?"ன்னு அப்பா கேட்டார். "நீங்க வச்சிருக்கீங்க,"ன்னு சொல்லிட்டு அப்பாவோட வாலட்டை எடுத்துட்டு வந்து காமிச்சேன். எல்லாரும் சிரிச்சாங்க. நானும் சிரிச்சேன்.

Sunday, February 05, 2006

கருத்தறிதல்


என் அம்மா நல்லா சமையல் பண்ணுவாங்க. என் அம்மா சமையலுல எனக்கு ரொம்பப் புடிச்சது உருளக்கிழங்கு பொரியல், புடிக்காதது அதுல போடுற சீரகமும் வெங்காயமும். அண்டைக்கு அம்மாகிட்ட நான் கிழங்கு பொரியல் கொஞ்சமா உறைப்பு போட்டு கேட்டேன். உடனே அம்மா ஆர்வக் கோளாறுல எனக்கு வேண்டாதது எல்லாம் போட்டு பொரிச்சு வச்சிருந்தாங்க. நா வேணான்னு அட்டகாசம் பண்ண, அம்மா சொன்னாங்க "அதுதான் தெம்பு, எல்லாம் சாப்பிட்டு பழகத்தான் வேணும் குட்டி" எண்டு. அப்போ நா சொன்ன "இல்ல அம்மா சீரகம் போட்டு சாப்பிட்டா சோர்வு எண்டு". அம்மா புரியாம என்ன பாத்தாங்க. அப்போ நா சொன்ன "அம்மா அப்படியென்னா தெம்பு இல்ல" எண்டு. அம்மா சிரிச்சிட்டு கேட்டாங்க "எப்படிடா குட்டி உனக்கு இந்த வார்த்தையெல்லாம் தெரியுது ?"எண்டு. அப்போ நா சொன்ன "just like that."

Saturday, February 04, 2006

தேங்காய்க்கண்

நானும் அப்பாவும் படிச்சுக் கொண்டிருந்தோம். அம்மாவுக்கு உதவி செய்வோம்ன்னு எந்திரிச்சுப் போனோம். அம்மா தேங்காயை உடைக்கச் சொன்னார். நான் தேங்கா ஜூஸ், தேங்கா ஜூஸ்ன்னு குதிச்சேன். தேங்காத் தண்ணின்னு அப்பா சொன்னார். தேங்காயை எடுத்து வெளிய வச்சார். பாத்தா தேங்காய்க்குக் கண்ணு இருந்துச்சு. இங்க பாருங்க தேங்காய்க்குக் கண்ணு இருக்குன்னு சொன்னேன். அப்பாவும் அம்மாவும் சிரிச்சாங்க. நா அதோட வாயைக் கிள்ளிட்டேன். தேங்காயைப் படம் புடிச்சோம். பாத்தீங்களா கண்ணு, வாய் எல்லாம் இருக்கு.

அப்புறமா தேங்காயை உடைச்சுத் தண்ணியை வடிகட்டி எனக்குக் குடுத்தாங்க. நல்லா இனிச்சுச்சு. ஓகே, பை.

Friday, February 03, 2006

குருவி சூரியனுக்குள்ள போச்சு

என் அப்பா பச்சை நிறத்தில் இப்படி இப்படிச் செய்தார். என்னிடம் இது என்ன என்று கேட்டார். நான் பாம்பு என்றேன். அப்புறம் இன்னும் கொஞ்சம் பச்சையை அடித்தார். மறுபடியும் இது என்ன என்றார். நான் புல் என்றேன். மறுபடியும் பச்சையடித்தார். என்ன என்றார். எனக்குத் தெரியாது என்றேன். நன்றாக யோசிக்கச் சொன்னார். நான் யோசித்தேனா இல்லையா என்று தெரியவில்லை. அப்புறம் கொஞ்சம் பழுப்பை எடுத்துக் கீழே அடித்தார். என் பக்கம் திருப்பி இப்போ என்ன என்றார். நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். இப்படி உய்ய்யரமாய் இருக்குமே அது என்ன என்றார். நான் மலை என்றேன். அப்பா வெரிகுட் என்றார். அப்புறம் அப்பா வானத்தில் ஒரு சூரியன் வரைந்தார். வேறு என்ன வானத்தில் இருக்கும் என்று கேட்டார். நான் குருவி என்றேன். குருவி வரையச் சொன்னார். என்னிடம் கருப்பு இருந்தது. பாருங்கள், நான் வரைந்த குருவி அது. அப்பா அருமை என்றார். குருவி எங்கே போகிறதென்று கேட்டார். அது சூரியனுக்குள்ள பறக்கப் போவுதுன்னு சொன்னேன். அப்புறம் சூரியனுக்குள்ள குருவி வரைஞ்சேன். அங்க பாருங்க இருக்கு, கருப்பா, அதான். சூரியனுக்குள்ள சூடா இருக்குமில்ல, அதுனால குருவி செத்துப் போச்சு. பாதி பாதியா கீழ விழுந்துருச்சு. எங்க வீட்டுக்கிட்ட கூட ஒரு பாதி குருவி கிடந்துச்சு. ஆனா இது வேற குருவி. ஒடம்புக்கு முடியாம செத்துப் போச்சுன்னு அம்மா சொன்னாங்க. ஓகே, பை.