மழலைச் சொல்

Tuesday, January 30, 2007

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!

எங்க ஊரில பொங்கல் விழா நடந்திச்சு. அப்ப அதில பாட்டுப் பாட வேண்டி அம்மா, அப்பா, பாட்டி எல்லாரும் எனக்குப் பாடச் சொல்லித் தந்தாங்க. நாங்க பொங்கல் கொண்டாட்டத்துக்குப் போனம். அங்கெ நிறைய ஆக்கள் இருந்தாங்க.

என்னயக் கூப்பிட்டுப் பாடச் சொன்னாங்க. அப்பாவும் என்னொட மேடைக்கி வந்தாங்க. வந்து மைக்கைப் பிடிச்சுக் கொண்டாங்க. நா வந்து அகர முதல, குழல் இனிது யாழ் இனிது திருக்குறள் ரெண்டும் சொல்லிப்போட்டு, ரெண்டு பாட்டுப் பாடினென். அதான் துடுப்பிடு துடுப்பிடு பிறகு மின்னி மின்னி விண்மீனே. அது ரெண்டையும் English அப்புறம் தமிழ்ல பாடினேன்.

பாடினத்துக்குப் பிறகு அப்பா இன்னொரு பாட்டு பாடச் சொல்லி மைக்கை நீட்டினாங்க. நா சொன்னேன், "எனக்கு ஒன்னுக்கு வருது", எண்டு. எல்லாரும் சிரிச்சாங்க. அப்பாவும் சிரிச்சுப்போட்டு, இதப் பாடி முடிச்ச பிறகு போலாமெண்டு சொன்னாங்க. சரியெண்டு நா அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் பாட்டப் பாடினென். இங்கெ போயி அதை நீங்களும் கேட்கிறிங்களா?

எல்லாப் பாட்டும் பாடி முடிச்ச பிறகு எனக்கு ஒரு பரிசு குடுத்தாங்க. அது ஒரு கார் புத்தகம்!

Sunday, January 28, 2007

நா ஒரு பெரியண்ணா!

அம்மாவொட முட்டிக்குள்ள இருந்த பாப்பா வெளியால வந்திட்டாங்க. இப்ப நா பெரியண்ணா ஆயிட்டேன். எனக்கு ஒரு ஸ்டிக்கர் குடுத்தாங்க, அதை சட்டையில ஒட்டிக்கொண்டேன். தங்கச்சிப் பாப்பாவைத் தூக்கி மடியில கொடுத்தாங்க. வச்சுக்கொண்டு பெரிய ஆக்கள் மாதிரி நானும் பாப்பாவை ஆட்டிப் பாத்தேன். ஆட்டினா பாப்பாவுக்கு வலிக்குமெண்டு சொல்லிட்டாங்க. பாப்பா தூங்கிக் கொண்டே இருக்காங்க. சில நேரம் நா வீட்டுக்குள்ள சத்தம் போடுறென். அப்பதான் பாப்பா முழிப்பாங்க. முழிச்சா நா கிட்டப் போயி கையைப் பிடிச்சுக் கூப்பிடுவேன். ஏனெண்டா பாப்பா என்னோட விளாடணும். அதுக்கு பாப்பா இன்னும் கொஞ்சம் பெரிசா வரணுமெண்டு சொல்லிட்டாங்க. ஒரு நாள் பாப்பாவுக்குச் சோச்சி குடுக்கலாமா எண்டு கேட்டேன். கூடாதுன்னு அம்மா சொன்னாங்க. அவங்க பால் மட்டுந்தான், அதுவும் ப்ரிட்ஜில இருக்கது இல்ல, அம்மாட்ட இருந்து மட்டுந்தான் குடிக்கணும் எண்டு சொல்லிட்டாங்க. ஒரு நாள் ஒரு கத்தரிக்கோல் மேசை மேல இருந்திச்சா, அப்பாவக் கூப்பிட்டு, அப்பா, இந்தக் கத்தரிக்கோலை சின்னப் பிள்ளைங்களுக்கு எட்டாத இடத்தில வச்சிருங்க எண்டு சொன்னேன். அப்பாவும் சரி எண்டு சொல்லி வச்சிட்டாங்க. நா பொறுப்பான பெரியண்ணாவா வந்திட்டேன் எண்டு சொன்னாங்க.

Wednesday, January 17, 2007

நா ஏன் கத்துறேன் தெரியுமா?

சில நேரம் நா வெளியில போயி ஊஊஊ... எண்டும், ஆஆஆ... எண்டும் பலமாக் கத்துவேன். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நா ஏன் அப்படிக் கத்துறேன் எண்டே புரியலை. அப்பா சொன்னாங்களாம், "அவருக்குள்ள இருக்க எதையோ வெளியில விடுறார், விடட்டும்," எண்டு. அம்மா சொன்னாங்களாம், "அப்படிக் கத்துறது, தம்பி பாதுகாப்பா விளையாடுறார் எண்டு சொல்லுற மாதிரி இருக்கு," எண்டு.

நேத்து ராச்சாப்பாட்டுக்குப் பிறகு நானும் அப்பாவும் வெளியில போயி குப்பையைப் போட்டிட்டு, கொஞ்ச நேரம் நடந்தோம். அப்ப நா மறுபடியும் ஊஊஊ... எண்டு கத்தினென். கத்திட்டு, "பாத்தீங்களா, எக்கோ (echo) வருது!" எண்டு சொன்னென். "ஓ! இதுக்குத்தான் இப்படிக் கத்துறீங்களா?" எண்டு அப்பா கேட்டாங்க. "ஆமா." எண்டு சொன்னென். "யாரு குட்டி இப்படிக் கத்துவா?" எண்டு அப்பா கேட்டாங்க. "யாரும் இல்ல, அந்த ச்சூ ச்சூ கதையில வருமே ஒரு ரயில் அதுதான் அப்படிக் கத்தினே போவும்," எண்டு சொன்னென்.

அப்புறமா எக்கோவுக்குத் தமிழ்ல எதிரொலியெண்டு சொன்னாங்க. பந்தை சுவத்தில அடிச்சா திரும்பி வருற மாதிரிதான் சத்தமும் திரும்பி வருமாம், அதான் எதிரொலி எண்டு சொன்னாங்க.

Tuesday, January 16, 2007

கொண்டாட்டத்துக்குப் போனோம்

அண்டக்கி ஒரு நாள் நா, அம்மா, அப்பா, பாட்டி, சித்தியாக்கள் எல்லாரும் ஒரு கொண்டாட்டத்துக்குப் போனொம். அது Happy New Year. அங்க நிறைய லைட் எல்லாம் போட்டிருந்திச்சு. நா அங்க ஓடி ஓடி விளாண்டேன். குட்டிக் கரணம் போட்டேன். ஒரு இடத்தில பாட்டுக் கச்சேரி நடந்திச்சா. போயிப் பாத்தோம். மேடைக்கி முன்னுக்குச் சில பிள்ளைகள் ஆடிக்கொண்டிருந்தாங்க. நானும்போனேன். கொஞ்ச நேரம் நின்னு பாத்தேன். அப்புறம் நிறைய போட்டோ எடுத்தேன். நிண்டு கொண்டே காலைக் கொஞ்சம் ஆட்டி ஆட்டி டான்ஸ் ஆடினேன். அப்புறமா வீட்டுக்கு வந்தோம்.

Monday, January 15, 2007

தானியக் கூடு

எங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு மரம் இருக்கு. ஒரு நாள் நாங்க கடைக்குப் போயி ஒரு தானியக்கூடும் ஒரு பை நிறைய தானியங்களும் வாங்கிட்டு வந்தோம். தானியக் கூட்டுக்குள்ள நாந்தான் தானியத்தைக் கொட்ட உதவி செஞ்சேன். அப்புறமா அதை மரத்தில தொங்க விட்டோம். முதல்ல பறவைகள்லாம் வந்து சாப்பிடவே இல்ல. அப்புறமா, நிறைய பறவைகள் வந்திச்சு. புறா, கருங்குருவி, blue jays, robin (சிவப்புக் குருவி), சின்னோண்டு குருவி அது பேரு அடைக்கலங்குருவின்னு அம்மா சொன்னாங்க, எல்லாம் காலையில வந்து கீச் மூச்சுன்னு கத்தும். எல்லாப் பறவைகளும் தானியக்கூட்டுல இருந்து கொத்திச் சாப்பிடும். ஆனா புறா மட்டும் கீழ சிந்துகிற தானியத்தைத்தான் கொத்திச் சாப்பிடும். ஆனா ஒரு புறா தானியக் கூட்டில இருந்தும் சாப்பிடும். சில வேளைகளில அணிலும் கீழே வந்து கொறிச்சு கொறிச்சு சாப்பிடும். தானியம் தீர்ந்து போனா மறுபடியும் கொட்டி வைப்போம். இப்பவெல்லாம் தினமும் நிறைய பறவைகள் வரும். மழை பெஞ்சாலும் வரும். வெயில் அடிச்சாலும் வரும். எனக்குப் பறவைகளைப் பார்க்கிறது விருப்பம்.