மழலைச் சொல்

Thursday, July 27, 2006

அம்மாவொட டாக்டர்

அம்மா, அப்பா, நான் மூனு பேரும் டாக்டர் ஆபிசுக்குப் போனம். ஏன்னா இங்கெ பாருங்க தெரியும். அந்த டாக்டர் எனக்கு விருப்பம். முந்தி அங்க போனப்பொ என்னைப் படம் கீறச் சொல்லி, அவங்க சுவத்துல ஒட்டி வச்சாங்க. நேத்தும் நா ஒரு படம் கீறிக்கொண்டு போனென். அந்தப் படத்துல அம்மா, அப்பா, நா, பாப்பா, டாக்டர் எல்லாம் நிக்கிறம். டாக்டர்கிட்ட குடுத்தென். சிரிச்சுகிட்டே வாங்கி இதையும் சுவத்துல ஒட்டிட்டாங்க. அம்மா வயித்துல கொஞ்சம் ஜெல் போட்டுட்டு ஒரு மைக் வச்சாங்க. உள்ள பாப்பாவோட இதயம் ஹுஹ் ஹூஹ் அப்படின்னு வேகமா அடிக்கிறது கேட்டுச்சு. சின்ன ஆக்களுக்கு இதயம் வேகமா அடிக்கும், பெரியாக்களுக்கு மெதுவா அடிக்கும். கிளம்பும்போது டாக்டர் எனக்கு மூனு ஸ்டிக்கர் குடுத்தாங்க. அது நிமோவுல வருமே மீன், சுறா மீன் அந்தப் படமெல்லாம் இருக்க ஸ்டிக்கர். சட்டையில ஒட்டிக்குவென். அப்புறமா நான் ரயில் விளாட்டு விளாடனும்னு கேட்டென். அது சின்னப் பிள்ளைங்களோட டாக்டர் இருக்க இடத்துலதான் இருக்கு, இப்ப அங்க போமுடியாதுன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்திட்டாங்க.

Saturday, July 22, 2006

கோயிலுக்குப் போனென்

நேத்து அப்பா ஒரு இடத்துக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போனாங்க. அது ஒரு கோயில். நிறைய படியால ஏறிப் போனம். ஷூவெல்லாம் கழட்டிட்டு உள்ள போனம். அங்க நிறைய சிலையெல்லாம் இருந்துச்சு.

ஒரு இடத்துல,
"அதுக்குப் பக்கத்துல நா போணும்" இன்னு அப்பாட்ட சிலையக் காட்டிச் சொன்னென்.
"அந்த அறைக்குள்ள போகக்கூடாது"ன்னு அப்பா சொன்னாங்க.
"ஏன்?"னு கேட்டென்.
"அங்க எழுதிப் போட்டிருக்கு"ன்னு அப்பா சொன்னாங்க.
கொஞ்ச நேரத்தால வேட்டி கட்டிட்டு ஒரு மாமா அந்த அறைக்குள்ள போனாங்க.
"அப்பறம் அவுங்க மட்டும் போறாங்க?" அப்படின்னு அப்பாட்ட கேட்டென்.
அப்பா சொன்னாங்க,
"அவங்க இங்க வேலை பாக்கறவங்க, அவங்க மட்டுந்தான் போவலாம். கடைகள்ல சில இடங்கள்ல எழுதியிருக்குமில்ல "இதுக்குள்ள கடை ஆக்கள் மட்டுந்தான் வரணும்"னு, அதுமாதிரிதான், அந்த அறைக்குள்ளயும் இங்க வேலை பாக்கறவங்க மட்டுந்தான் போவணுமாம்."

அப்புறம் ஒரு இடத்துல ஒரு பெரிய பெட்டி மாதிரி இருந்துச்சா,
"இது என்னப்பா?"ன்னு கேட்டென்.
"அது பேரு உண்டியல்"னு அப்பா சொன்னாங்க.
"அதுல என்ன எழுதியிருக்கு?"ன்னு கேட்டென்.
"காசை இதுக்குள்ள போடுங்கன்னு எழுதியிருக்காங்க" அப்படின்னு அப்பா சொன்னாங்க.
உடனே நா கேட்டென்,
"அதுக்குள்ள காசு போட்டா என்ன வரும்?"

அப்பா சிரிச்சாங்க.

Tuesday, July 18, 2006

வானவில் மீன்


ஒரு கடல்ல வானவில் மீன் அப்படின்னு ஒரு மீன் இருந்துச்சாம். அதுகூட யாருமே விளாடலயாம். ஏன் நம்மகூட யாரும் விளாடவே வரலைன்னு அந்த மீனுக்குக் கஷ்டமா இருந்துச்சாம். "ஏன் எங்கூட யாரும் விளாட வரலை"ன்னு நண்டுகிட்ட போயி கேட்டுச்சாம். நண்டு சொன்னுச்சாம், "நீங்க போயி நட்சத்திர மீனுகிட்ட கேளுங்க" அப்படின்னு. நட்சத்திர மீனுகிட்ட கேட்டப்ப, "நீங்க போயி அதோ அந்த ஆக்டபஸ்கிட்ட கேளுங்க"ன்னு சொன்னுச்சாம். ஆக்டபஸ்கிட்ட கேட்டப்ப, அது சொன்னுச்சாம், "வானவில் மீனே வானவில் மீனே, நீங்க யார் கூடயும் உங்க விளாட்டு சாமான்களையெல்லாம் பகிர்ந்துக்குறதே இல்ல, அதான் யாருக்கும் உங்ககூட விளாட விருப்பமில்ல. நீங்க பகிர்ந்துக்கிட்டா எல்லாரும் உங்ககூட விளாடுவாங்க"ன்னு சொன்னுச்சாம். உடனே வானவில் மீன் தன்கிட்ட இருந்த நிறங்களையெல்லாம் எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் குடுத்துச்சாம். அப்புறமா எல்லோரும் சந்தோஷமா ஒன்னா விளாண்டாங்களாம்.

இந்தக் கதையை நேத்து கதை நேரத்துல திருமதி வெபர் சொன்னாங்க. அப்புறமா ஒரு மீன் படத்தைத் தந்து வண்ணம் பூசச் சொன்னாங்க.

இப்ப நா பெரிய்ய பையனா வந்துட்டேன்னு சொல்லி எனக்கு ஒரு நூல்நிலைய அட்டை குடுத்தாங்க. அது மஞ்சள் நிறம். நா எத்தனை புத்தகம் வேணுமின்னாலும் எடுக்கலாம். நா நிறைய்ய்ய புத்தகம் வச்சிருக்கேன். அம்மா எனக்குப் படிச்சுப் படிச்சுக் காட்டுவாங்க. எனக்குப் புத்தகம் வாசிக்கிறது விருப்பம்.

Monday, July 17, 2006

முட்டிக்குள்ள ஒரு பாப்பா

நாங்க நோர்வேக்குப் போனம். அங்க ஒரு சிலை இருந்திச்சு. இப்படித்தான் முட்டிக்குள்ள பாப்பாக்கள் எல்லாம் இருப்பாங்களாம். முட்டி எண்டா வயிறு. எங்க அம்மாட முட்டிக்குள்ளயும் ஒரு பாப்பா இருக்காங்க. தங்கச்சிப் பாப்பா வரப் போறாங்கன்னு சொன்னாங்க. தங்கச்சி இல்லாட்டி தம்பி. எனக்குத் தங்கச்சிப் பாப்பா விருப்பம். இப்பவெல்லாம் நா அம்மா, அப்பா, நா படம் கீறுறப்ப சின்னதா தங்கச்சிப் பாப்பாவையும் கீறுறன். தங்கச்சிப் பாப்பா வந்துட்டா நம்ம வீட்ல நாலு பேர் எண்டு நேத்து சொன்னென். நா தங்கச்சிப் பாப்பாவை ஸ்றோலர்ல வச்சித் தள்ளிக்கொண்டு போவென். அப்பா நேத்து ஒரு குட்டித் தலவாணியைக் கொடுத்து இதான் தங்கச்சிப் பாப்பா எண்டு சொன்னாங்க. நா தூக்கமாட்டென்னு சொன்னென். ஏனெண்டா பாப்பாவோட எச்சி ஒட்டிக்கும். ஆனா தங்கச்சிப் பாப்பாவோட விளாடுவென்.

Sunday, July 16, 2006

ஏரிக்குப் போனமா...

அப்பா சிரிப்பா ஒரு விஷயம் சொன்னாங்க. அது என்னன்னா, ஒரு அப்பா இருந்தாராம். அவருக்கு ஒரு பையன் இருந்தாராம். அந்த அப்பா ஒரு நாள் அந்தப் பையனைத் திருவிழாக்குக் கூட்டிட்டுப் போனாராம். அப்ப சொன்னாராம் "டேய் திருவிழாக்குக் கூட்டிட்டுப் போவேன் ஆனா ஒன்னும் கேக்கக் கூடாது." ஆனா திருவிழாவுக்குப் போனத்துக்கு அப்புறம் அந்தப் பையன் விசில் கேட்டு அழுதாராம். உடனே அந்த அப்பா சொன்னாராம், "டேய் விசில் வாங்கித் தருவேன், ஆனா ஊதக்கூடாது." எனக்கு இதைக் கேட்டா சிரிப்பா வரும்.

நாங்க நேத்து ஒரு ஏரிக்குப் போனம். அது ஒரு பெரிய்ய ஏரி. அங்க குளிக்கலாம், படகில போலாம். விளையாடலாம். அப்போ நான் அப்பாகிட்ட சொன்னென், "அப்பா, ஏரிக்குக் கூட்டிட்டுப் போவென், ஆனா நீச்சல் அடிக்கக் கூடாது." அப்பா, அம்மா, அத்தை எல்லாம் சிரிச்சாங்க. ஏரியில நா ரொம்ப நேரம் குதிச்சுக் குதிச்சுக் குளிச்சென். படகில போனென்.

அப்புறமா இண்டக்கி சாப்பிடும்போது நா சொன்னென், "அப்பா, சாப்பிடுற கடைக்குக் கூட்டிட்டுப் போவென், ஆனா முழுங்கக் கூடாது."