மழலைச் சொல்

Tuesday, September 05, 2006

Tele எண்டா தொலை

படுக்கையில அப்பாவோட கிடந்து புரண்டு கொண்டிருந்தேன். அப்பா தன்னோட விரல்களைச் சுருட்டி, குழாய் மாதிரி செஞ்சு அது வழியா என்னைப் பாத்தாங்க. நானும் அப்படிச் செஞ்சேன். "இப்படி நாம தொலைநோக்கியால பாத்தா நச்சத்திரம், அம்புலி எல்லாம் பக்கத்துல தெரியும்"னு சொன்னாங்க.
அப்போ நா கேட்டேன் "நச்சத்திரம், அம்புலி எல்லாத்தையும் தொலைநோக்கி புடிச்சு கிட்ட இழுத்துக்கிட்டு வருமா?"
"இல்ல குட்டி, தொலைநோக்கியில இருக்க கண்ணாடியெல்லாம் சேந்து நமக்கு அப்படி கிட்டக்க தெரியும்."
"Telescopeன்னா தொலைநோக்கி
Telephoneன்னா தொலை பேசி
Televisionன்னா தொலைக் காட்சி
அப்போ Teleன்னா என்னா?"ன்னு அப்பா கேட்டாங்க.
நா சொன்னேன் "தொலை!"
அப்புறம் நா யோசிச்சுட்டு சொன்னேன், "Teletubbies!"
அப்பா சிரிச்சுட்டு கேட்டாங்க, "அப்படின்னா என்ன குஞ்சு?"
"அது தெரியும், ஆனா எங்கயும், தூஊஊஊரத்திலயும் இருக்காது,"ன்னு சொன்னேன்.
"ஓ டெலிடபிஸ் நிஜமா இருக்காதா?"ன்னு அப்பா கேட்டாங்க.
"இல்லை. அது ஒரு friendly monster. தொலைக்காட்சியில தெரியும். ஆனா நிஜமா அப்படி யாரும் இருக்க மாட்டாங்க,"ன்னு நா சொன்னேன்.

Friday, September 01, 2006

அப்படித்தான் சொல்லுவாங்க

வேற வேற ஆக்களா மாறி விளாடுறது எனக்கு விருப்பம். சில நேரம் நா அப்பாவா மாறிடுவேன். அப்பா குஞ்சா மாறிடுவாங்க. இல்லாட்டி நா Fred. அப்பாதான் Bill. Fred, Bill எல்லாம் அப்பாவோட வேலை செய்றாங்க. சில நேரம் நாந்தான் சின்ன தீயணைப்பு வீரர், அம்மாதான் பெரிய தீயணைப்பு வீரர். ஊய்ய்ய்ங் ஊய்ய்ய்ய்ங் அப்படீன்னு கத்திக்கிட்டே ஓடுவோம்.

ஒரு நாள் நா அப்பாவா இருந்தேன். அப்பா குஞ்சா இருந்தாங்க. அப்போ நா விறுவிறு எண்டு கிளம்பிக்கொண்டே "குஞ்சு நா சீக்கிரம் வேலைக்கிப்
போணும், இன்னக்கி ஒரு மீட்டிங் இருக்கு" அப்படின்னு சொன்னேன். உடனே அப்பா எனக்குக் குறுக்கெ கையை நீட்டிக்கொண்டு "இல்லை அப்பா நீங்க இப்ப போக்கூடாது"ன்னு சொன்னாங்க. அதுக்கு நா சொன்னேன் "இல்ல குஞ்சு அங்க Bill எல்லாரும் காத்திருப்பாங்க, நா போகணும், சாயங்காலம் வந்து விளாடுறேன், சரியா?" அப்படின்னு சொன்னேன். அப்பாக்கள் எல்லாம் அப்படித்தான் சொல்லுவாங்க.இதான் நா கீறுன அப்பாவோட பஸ். நீலமா இருக்கது வானம்.