மழலைச் சொல்

Sunday, March 26, 2006

நானும் இந்தச் செடியும் படும் பாடு

எங்க வீட்டில இருக்கிற செடிகளில இதுவும் ஒண்டு. நா சின்னப்பிள்ளையா இருக்கும் போது இதுக்கு என்ன பேரெண்டு அம்மாக்கிட்ட கேட்டேன். Peace Lilly எண்டு சொன்னாங்க. எனக்கு இதுக்கூட விளையாடப் புடிக்கும். எங்கிட்ட இருக்கிற குட்டி குட்டி கார்கள் எல்லாத்தையும் எடுத்துண்டு வந்து செடிக்குப் போட்டிருக்கிற மண்ணையெல்லாம் அள்ளிக் கீழ போட்டு அதுல ஓட்டி ஓட்டி விளாடுவென். அம்மா வந்து பாத்துட்டு இப்படியெல்லாம் செய்ய வேணா ஏனெண்டா, மண்ணுதா அதுக்குச் சாப்பாடு அந்த சாப்பாடெல்லாம் வெளிய எடுத்து போட்டுட்டா செடி வாடிரும், தெம்பால்லாம் இருக்காது, மயக்கம் போட்டு விழுந்துடும் எண்டு சொன்னாங்க. அப்போ நா காமராஜ் தாத்தா படத்திலக்கூட ஒரு அண்ணா சாப்பிடாம மயக்கம் போட்டு விழுவாங்களே அது மாதிரியா எண்டு கேட்டேன். அதுக்கு அம்மா ஆமா எண்டு சொன்னாங்க. சரி இனிமே நா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன் எண்டு சொன்னேன். அண்ணைக்கு ஒரு நாள் நா சின்னப் பிள்ளையா இருந்தப்போ அந்தச் செடிக்கு மேல என் காரையெல்லாம் ஓட்டி இலையெல்லாம் முறிஞ்சிப்போச்சி. அப்போ அப்பா இப்படியெல்லாம் செய்ய வேணாம் எண்டு கண்டிப்பா சொல்லிற்றாங்க. வழக்கம் போல சரி இனி நா செய்யல எண்டு சொன்னேன். இன்னொரு நாள் அம்மா செடிக்குத் தண்ணி ஊத்திட்டு குளியலறையிலேயே வச்சிட்டு வந்துட்டாங்க. அந்தப் பக்கம் நா போனப்போ செடிய எடுத்துக் கழுவு தொட்டிக்குள்ள வச்சி நிறைய சுடுதண்ணி திறந்து விட்டேன். அம்மாவுக்கு பயங்கர கோவம் வந்திருச்சி. என்னை sofaல போய் உக்காந்து நா செய்ததெல்லாம் சரியா தப்பா எண்டு யோசிக்க சொன்னாங்க. இப்பெல்லாம் அந்தச் செடி சாப்பாட்டு மேசையிலத்தான் இருக்கு.

இண்ணைக்கு காலையில நாங்கெல்லாம் காலைச் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தப்போ அம்மா ஆஆஆ பூ பூத்திருச்சு அப்படியெண்டு சொன்னாங்க. நா மேசையில ஏறிப் பாத்தேன், வெள்ளையா ஒரு குட்டிப் பூ இருந்துச்சு. அப்பாடா, ரெண்டு வருசத்துல இப்பதான் பூத்திருக்கு எண்டு அம்மா சொன்னாங்க. தொட்டுப் பாக்கலாமா எண்டு கேட்டேன். இல்ல முதல்ல கீழ இறங்குங்க எண்டு சொல்லிற்றாங்க!

Saturday, March 25, 2006

சனி ஞாயிறு


நா தூங்கி எழுந்து வந்தென். அப்பா குளிக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சு. உள்ள போனென். "அப்பா நீங்க இண்டைக்கி வேலைக்குப் போவேண்டாம்," எண்டு சொன்னென். அப்பா தண்ணிய நிறுத்திட்டு, திரையை விலக்கிட்டு, கீழ உக்காந்து, "ஏன் குட்டி?" அப்படிண்டு கேட்டாங்க. நா சொன்னென், "ஏன்னா நீங்க எனக்கு ரொம்ப விருப்பம்." அதுக்கு அப்பா ஒரு மாதிரி சிரிச்சுட்டு "இண்டக்கிப் போகணும் குட்டி, ஆனா சனிக் கிழமையும், ஞாயித்துக் கிழமையும் வீட்லயே இருப்பென், சரியா?" எண்டு கேட்டாங்க. நான், "சரி அப்பா, சனிக் கிழமையும், ஞாயித்துக் கிழமையும் வீட்ல இருப்பீங்க, சரி," அப்படின்னு சொல்லிட்டு மறுபடியும் போய்ப் படுத்துக் கொண்டென்.

Thursday, March 23, 2006

படக்கதை


அப்பா கரும்பலகையில ஒரு படம் கீறினாங்க. அதுல ஒரு சூரியனும் மலையும் இருந்துச்சு. கீழ ஒரு ஆறு கீறினாங்க. அப்பதான் நா அங்க போனென். "ஆத்துல யாரும் குளிக்காதீங்க" அப்படின்னு ஒரு அறிவிப்புப் பலகை வைக்கச் சொன்னேன். அப்பா, "இல்ல வைப்போம், ஆனா கவனமாக் குளிக்கச் சொல்வோம், ஏன்னா அது ஆழமான ஆறு"ன்னு சொல்லிட்டு, ஒரு அறிவிப்புப் பலகை வச்சாங்க. அப்புறமா அக்கரையில ஒரு காடு கீறினாங்க. அதுல ஒரு காட்டெருமை கீறச் சொன்னென். அதுவும் ஒரு மானும் புல் மேயுற மாதிரி கீறினாங்க. அப்புறம் ஒரு சாலை கீறினாங்க. "மான் குறுக்க வரும், கவனம்" அப்படின்னு அதுலயும் ஒரு அறிவிப்புப் பலகை வைக்கச் சொன்னென். ஆனா அப்பா, "காரே இந்தப் பக்கம் வரக்கூடாது"ன்னு வச்சிட்டாங்க. ஏன்னு கேட்டேன், அது மானுக்கெல்லாம் இடைஞ்சலா இருக்கும், அந்தச் சாலையில நடந்து போகலாம், சைக்கிள்ல போகலாம்னு சொன்னாங்க. அப்புறமா மேகம் கீறினாங்க. நிறைய மேகம் போடச் சொன்னென். அதுலேருந்து மழை பேயச் சொன்னென். இடியும் கீறச் சொன்னென். பாத்தா மழை பேயுது, மான் அதுபாட்டுக்கு மேயுது. அப்போ நா அப்பாகிட்ட சொன்னேன், "அப்பா மழை வருதுல்ல, அதுனால மானெல்லாம் மேல பாக்குற மாதிரி கீறுங்க," அப்படின்னு. அப்பா சிரிச்சுட்டு மானும், காட்டெருமையும் மேல பாக்குற மாதிரி கீறினாங்க. கீறி முடிச்சுட்டு, அந்த மலைக்குப் பக்கத்துல ஒரு பையன் இருந்தானாம் அப்படின்னு ஒரு கதையும் சொன்னாங்க. எனக்குக் கதை ரொம்ப விருப்பம். அதுக்காண்டிதான் அம்மா எனக்கு நிறையக் கதை வாசிச்சுக் காட்டுவாங்க.

Wednesday, March 22, 2006

அப்பாவுக்குப் பூ


அப்பாவுக்கு பிறந்த நாள் வந்துச்சு. அம்மாவும் நானும் சேர்ந்து ஒரு வாழ்த்து அட்டை செய்தோம். சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு வண்ணக் காகிதமெல்லாம் எடுத்து வெட்டிப் பூ செய்தோம். அப்புறம் பச்சைநிற காகிதம் எடுத்து வெட்டி இலை தண்டு எல்லாம் செய்தோம். அம்மா ஒட்டுறதுக்கு நாந்தான் பசை எல்லாம் போட்டேன், அம்மா ஒட்டினாங்க. அப்புறம் உள்ளுக்குள்ள xoxoxoxo வும்
I love U வும், கேக் படமும், அம்மா, அப்பா, நான் படமும் கீறினேன். அப்புறம் மேசையில அப்பாவுக்காக வைச்சோம். அப்பா வந்தவுடன பாத்து ஆச்சரியப்பட்டாங்க. நன்றி சொன்னாங்க. முத்தமும் குடுத்தாங்க.

Monday, March 20, 2006

பெரிய்ய படம்

அம்மாவும், அப்பாவும் ஒரு ஆச்சரியமான இடத்துக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போனாங்க. எந்த இடம்னு தெரிஞ்சுக்க எனக்கு ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. ஆனா அவங்க எங்கிட்ட அதைச் சொல்லலை. அங்க போனா நானே தெரிஞ்சுக்குவன்னு சொல்லிக் கூட்டிக் கொண்டு போனாங்க. அந்த இடத்துக்குள்ள நுழைஞ்சதும் நிறைய விளக்கெல்லாம் இருந்துச்சு. ஒரு பாப்கார்ன் கடை இருந்துச்சு. வாசம் அடிச்சது. அம்மா போயி சீட்டு வாங்கிட்டு வந்தாங்க. நாங்க ஒரு அரங்கத்துக்குள்ள போனம். அங்க நிறைய்ய நாற்காலிகளும், ஒரு பெரிய்ய திரையும் இருந்துச்சு.

கொஞ்ச நேரத்தால அந்தத் திரையில க்யூரியஸ் ஜார்ஜ் வந்தார். மஞ்சள் தொப்பிக் காரரும் வந்தார். அந்தப் படத்துல ஒரு பெரிய காவலாளி வந்து மோப்பம் பிடிச்சுப் பாத்தார். அவரைப் பாத்தப்ப எனக்கு பயமா இருந்துச்சு. வீட்டுக்குப் போகணும்னு இருந்துச்சு. அம்மா மடியில போயி உக்காந்துட்டேன். அப்புறம் பயமாயில்ல. பிறகு ஒரு பாட்டி வந்து வ்வ்வாஆஆ...அப்படின்னு பாட்டுப் பாடினாங்க. ஜார்ஜ் வந்து கலரெல்லாம் எடுத்து சுவத்துல தெறிப்பாங்க. அப்புறம் ஜார்ஜ் ஒரு மியூசியத்துல போயி டைனசோர் எலும்புல ஏறி, கீழ தள்ளிருவாங்க.

இதெல்லாம் இருக்கும். அதான் க்யூரியஸ் ஜார்ஜ் படம். ஜார்ஜ் நிறைய சிரிப்பு காமிப்பாங்க. படம் முடிஞ்ச பிறகு அப்பா அந்தத் திரைக்குப் பக்கத்துல கூட்டிட்டு போயி காமிச்சாங்க. நா அது மாதிரி பெரிய்ய திரைய பாத்ததே இல்ல.

Sunday, March 19, 2006

மியாவ் மியாவ்

அண்டைக்கு நானும் அம்மாவும் நிலாவொளிக் கதை நேரத்துக்குப் போனோம். அது என்னெண்டு கேக்குறிங்களா, அதுதான் moon light story time. அது வாசகசாலையில நடக்கும். நெசமான நிலா வெளிச்சத்தில எல்லாம் சொல்ல மாட்டாங்க. பின்நேரத்தில கதை சொல்லுறதால அத அப்படிச் சொல்லுவாங்க. இப்பதான் பனிக் காலம் ஆச்சே எப்படி வெளியால உக்காந்து கதை கேக்கிறது, குளிருமே, அதால ஒரு அறையிலதான் நடக்கும். எப்பவும் அங்கத்தான் நடக்கும். என்னை மாதிரி நிறைய சின்னச் சின்னப் பிள்ளைங்க எல்லாம் வருவாங்க. Steveதான் எங்களுக்குக் கதை சொல்லுவாங்க.

அவங்க அண்டைக்கு பூனையப்பத்தி ஒரு கதை சொன்னாங்க. ஆனா அந்தக் கதை எனக்குப் பெரிசா விருப்பமா இருக்கல. அப்புறம் பூனை செய்யலாம் எண்டு எல்லாருக்கும் ஒரு பை கொடுத்தாங்க. அதுக்குள்ள
ஒரு brown paper bag, ஒரு மூக்கு, இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கால்கள் எல்லாம் குடுத்தாங்க. அதைக் கொண்டு பூனை செய்ய அம்மா எனக்கு உதவி செஞ்சாங்க.

இதான் நா செஞ்ச பூனைக்குட்டி.
இதைக் கையில மாட்டிக் கொண்டு மியாவ் மியாவ்...ன்னு கத்தினேன்.

Saturday, March 18, 2006

பறக்குது பார்! பறக்குது பார்!


நா ஒரு படம் கீறினேன், அதான் இது. இது அம்மா எனக்குச் சொல்லித் தந்த பாட்டு. இந்தப் பாட்டை அம்மா சின்னப் பிள்ளையா இருக்கும் போது படிச்சாங்களாம், அப்புறம் அந்தக் கா....லத்துல அப்பாவுக்குப் படிச்சாங்களாம், நா சின்னக் குஞ்சா இருந்தப்ப என்னை நித்திரைக்குப் போடவும் படிச்சாங்களாம்.

வண்ணத்துப் பூச்சி, வண்ணத்துப் பூச்சி
பறக்குது பார்! பறக்குது பார்!

அழகான செட்டைகள், அழகான செட்டைகள்

அடிக்குது பார்! அடிக்குது பார்!


பூக்கள் மேலே, பூக்கள் மேலே

பறந்து போய், பறந்து போய்

தேனைக் குடித்து, தேனைக் குடித்து

களிக்குது பார்! களிக்குது பார்!


சிவப்பு, மஞ்சள், கறுப்பு, வெள்ளை

பொட்டுக்கள் பார்! பொட்டுக்கள் பார்!

தொட்டதும் விரலில், தொட்டதும் விரலில்

பட்டது பார்! பட்டது பார்!


Wednesday, March 15, 2006

வாழைப்பழத் தோல்

அம்மாவும் அப்பாவும் நானும் இரவுச் சாப்பாடு சாப்பிட்டு முடிச்சப்புறம் பழம் சாப்பிடலாம் எண்டு சொல்லி, எல்லாரும் வாழைப்பழம் சாப்பிட்டோம். சாப்பிட்டு முடிச்சதும் தோலைக் கீழ போட்டுட்டேன். அப்போ அப்பா, வாழைப்பழத் தோலைக் குப்பையில போடணும் எண்டு சொன்னாங்க. அதுக்கு ஒரு கதையும் சொன்னாங்க. எப்படின்னா,

ஒரு நா ஒரு பையன் வாழைப்பழத் தோலைக் கீழ போட்டுட்டாராம். அவங்க அப்பா அது வழியா நடந்து வந்தாங்களாம். தோல் கீழ கிடந்தது தெரியாம அந்த அப்பா, அது மேல காலை வச்சு சர்ர்ருன்னு வழுக்கி தொபுக்கடீர்ன்னு விழுந்துட்டாங்களாம். அப்புறம் அடி பட்டு மருத்துவர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்களாம். அதுனால தோலைக் கீழ போடக் கூடாது எண்டு அப்பா சொன்னாங்க.

கதையெல்லாம் உம் உம்முன்னு கேட்டுப்போட்டு, அப்பாகிட்ட கேட்டேன், "குரங்கெல்லாம் வாழைப்பழத் தோலை எங்க போடும்?" அம்மாவும், அப்பாவும் சிரிச்சாங்க. அப்பா, "குரங்கெல்லாம் மரத்திலேயே தாவி தாவி பாய்ஞ்சு போறதால கீழ போட்டாலும் பிரச்சனை இல்ல; அதோட, அது கையையும் ஊண்டிக் கொண்டு நாலு கால் மிருகம் மாதிரிதான நடக்கும், அதனால வழுக்கி விழாது. ஆனா மனுசங்க ரெண்டு காலால நேராத்தான நடக்குறாங்க, அதனால வழுக்கி விழுந்துருவாங்க," எண்டு சொன்னாங்க. அப்புறம் அப்பாவே தோலை எடுத்துக் குப்பையில போட்டுட்டாங்க!

Tuesday, March 14, 2006

பிரியாணி செய்யத் தெரியுமா?

அம்மாவும் நானும் அப்போ அப்போ அமைதியா இருக்கிற விளையாட்டு விளையாடுவோம். அப்படினா என்னண்டு கேக்குறிங்களா அதுதான் quiet time. நா குழப்படி ரொம்பப் பண்ணுனா இந்த விளையாட்டு விளையாடுவோம். அண்டைக்கும் விளையாடினோமா அப்போ அம்மா ஏதோ எழுதிக்கொண்டிருந்தாங்க. என்னெண்டு கேட்டேன். "Chicken பிரியாணி செய்யிறது எப்படிண்டு எழுதுறேன்," அப்படிண்டு சொன்னாங்க. அப்போ இப்படித்தான் செய்யிறது எண்டு நா சொன்னேன்,
"Biriyani rice,fry chicken, oil, chicken biriyaniக்கு chicken biriyani sauce, onion.
Cook and fry the chicken in the sauce.
Mix it with chicken and sauce and fish and gravy and some more fish and chicken.
And fry it with rice, fish, chicken and soup and biriyani.
And eat it with தயிர்.
Indain railways ல போகும் போது சாப்பிடலாம்," எண்டு சொன்னேன். அம்மா சிரிச்சிட்டு நா நல்ல சமையற்காரரா வருவேன் எண்டு சொன்னாங்க.


இதான் சித்தியாக்கள் ஒரு நா செஞ்ச இறால் பிரியாணி. (பிரியாணியை நீங்க சாப்பிட்டுட்டு படத்தை எங்களுக்கு அனுப்பினத்துக்கு நன்றி சித்தியாக்கள் :))