மழலைச் சொல்

Tuesday, February 27, 2007

பறவைக் கூடு

அப்பா வேலையில இருந்து வரும்போது நா வெளியில விளாடிக்கொண்டு இருந்தேன். அப்பாவொட கார் தெரிஞ்சதும், ஓடிப் போயி ஏறிக் கொண்டேன். நானும் அப்பாவுந்தான் காரைக் கொண்டு வந்து நிறுத்துவோம். கியரை D க்கு நகர்த்தினா கார் ஓடும். நிறுத்திட்டு P யில போடணும். அதையெல்லாம் நாந்தான் நகர்த்துவேன்.
காருக்குள்ள அப்பா கேட்டாங்க,
"என்ன விளாடுறீங்க, குட்டி?"

நா சொன்னேன், "ஒரு பறவைக் கூடு கட்டுறேன்."
"பறவைக் கூடா?"
"ஆமா! இந்தக் குச்சியை எல்லாம் எடுத்து இப்பிடி இப்பிடி வச்சு. அதோ இருக்கு!"
"ஓ!"
"கீழ கிடக்கிற குச்சியையெல்லாம் பொறுக்கி இந்தக் கொட்டு வண்டியில வச்சுக் கொண்டு வந்து கட்டுறேன்."
அப்புறம் கிட்ட போயி பாத்தோம்.
"இதுக்குள்ளதான் வந்து முட்டையெல்லாம் இடும்,"னு சொல்லிட்டு கூட்டுக்குள்ள கையை விட்டுக் காமிச்சேன்.

Tuesday, February 20, 2007

என் கேள்விக்கு என்ன பதில்?-3


நானும் அப்பாவும் காரில போய்க்கொண்டிருந்தொம். அப்ப ஒரு ஹெலிகாப்டர் மேல போச்சுது. நா அப்பாட்ட கேட்டென்,
"அப்பா இந்த ஹெலிகாப்டர் என்ன வேகத்தில போகுது?"
அப்பா சொன்னாங்க, "ஒரு 100 மைல் வேகம் இருக்கும் குட்டி."
கொஞ்சம் நேரம் கழிச்சுக் கேட்டென்,
"அப்பா விமானத்தோட வேகத்தை எப்படிப் பாக்குறாங்க?"
"என்ன குட்டி?"
"கார்ல எல்லாம் தெரியிதுல்ல, 40 அப்படின்னு அதுமாதிரி விமானம் போறப்ப அதோட வேகம் எப்படித் தெரியும்?"
"அதாவது விமானத்தோட வேகத்தை எப்படி அளக்குறாங்கன்னு கேக்கறீங்களா?"
"ஆமா"
"ம்...நல்ல கேள்வி குட்டி. நா என்ன நெனக்கிறென்னா, விமானம் இப்ப இங்க இருக்குன்னு வச்சுக்குவொம், இன்னும் ஒரு நிமிஷத்துல இன்னொரு இடத்தில இருக்கும். அப்ப ரெண்டுக்கும் நடுவுல இருக்க தூரத்தைக் கணக்குப் போட்டுப் பாத்தா விமானத்தொட வேகம் தெரியும். அது விமானிக்குப் பக்கத்தில இருக்க திரையில தெரியும்."

(அப்பா சொன்னது எனக்குப் புரிஞ்சிச்சா, புரியலையா எண்டது வேறெ. நீங்க சொல்லுங்க விமானத்தொட வேகத்தை எப்பிடி தெரிஞ்சுக்கிறது?:))

என் கேள்விக்கு என்ன பதில்?-1
என் கேள்விக்கு என்ன பதில்?-2

Tuesday, February 06, 2007

முயலும் ஆமையும்

அப்பா எனக்கு ஒரு கதை சொன்னாங்க. அது 'முயலும் ஆமையும்' கதை. அப்பா சின்னப் பிள்ளையில கேட்ட கதையாம். அதான், முயல்கூட நித்திரை கொண்டுரும், ஆமை வெல்லுமே அந்தக் கதை. சொல்லி முடிச்சுட்டு அப்பா கேட்டாங்க, "இதிலெருந்து உங்களுக்கு என்ன தெரியுது?"
நா சொன்னென், " ஆமைதான் வேகமா ஓடும்!"

Sunday, February 04, 2007

கனவு வரணும்

தூங்கும்போது எனக்குக் கனவு வரும். நேத்து அப்பாகிட்ட சொன்னென், "அப்பா, எனக்குக் கனவெல்லாம் திரும்பத் திரும்ப வரணும்," எண்டு.
"ஏன் குட்டி?"
"அப்பதா நல்லா சிரிப்பாருக்கும். தினம் கனவு வரணும்."
நா தூங்கும்போது சில நேரம் சிரிப்பென்னு அம்மாவும் அப்பாவும் சொல்லுவாங்க. ஆனா monster (பூதம்), சிலந்தி எல்லாம் வந்தா அழுவென். கனவில சிரிச்சா எந்திரிக்க மாட்டென், ஆனா அழுதா எந்திரிச்சிடுவென். தூங்குறதுக்கு முன்னாடி புத்தகம் படிச்சா நல்ல கனவா வரும்னு அம்மா சொன்னாங்க. அம்மா எனக்குப் புத்தகம் படிப்பாங்க.

Thursday, February 01, 2007

ஒளி விளையாட்டு

நானும் அப்பாவும் ராவையில ஒளி விளையாட்டு விளாடுவோம். ஒளி விளையாட்டு எப்படி விளாடுறதுன்னா, ஒரு இருட்டறைக்குள்ள போவொம். ஃப்ளாஷ் லைட்டை (torch light) எடுத்து பை, பலூன், பிளாஸ்டிக் விளையாட்டு சாமான்கள், பந்துகள், வண்ணக் காகிதங்கள் எல்லாத்துக்கு உள்ளயும் அடிப்போம். அப்ப அழகான வண்ண வெளிச்சமெல்லாம் தெரியும். அப்பாவும் நானும் கதை, பாட்டு, வசனம், வாயாலே எதாச்சும் இசை எல்லாம் சொல்லிக்கிட்டே லைட் அடிச்சு விளாடுவோம். அருண் மாமா எனக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ் லைட் தந்தாங்க. அதுக்குள்ள ஒன்பது பல்பு இருக்கு. டார்ச் லைட்டை அடுத்தாக்களோட கண்ணில, முகத்தில அடிக்கக் கூடாது. ஏன்னா கண்ணு கெட்டுப் போய்டும். நா தினமும் ஒளி விளாட்டுக்கு அப்பாவக் கூப்பிடுவென். ஆனா அப்பா சில நேரம் வருவாங்க, சில நேரம் நாளக்கி விளாடலாம்னு சொல்லுவாங்க.