அவர்கள் சொல்வதும், நான் செய்வதும்
அப்படிச் செய்யக் கூடாதென்று அம்மாவும் அப்பாவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் மறுபடியும் அதைச் செய்தேன். அதுதான், செடி வைத்திருக்கும் அந்தத் தொட்டியிலிருந்து மண்ணைத் தோண்டித் தோண்டிக் கீழே இறைப்பதும், இறைந்த மண்ணின் மீது என் வண்டிகளை ஓட்டி விளையாடுவதும்தான். இரவு அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் சாப்பிட்டு முடித்துக் கைகழுவ எழுந்து வந்தேன். கையைக் கழுவிவிட்டு என்ன செய்யலாம் எனச் சுற்றும் முற்றும் பார்த்த போது அந்தச் செடித் தொட்டியில் இருந்த மண் அள்ளு அள்ளு என்று என்னைக் கூப்பிட்டது. மண்ணை அள்ளி அள்ளிக் கழுவுதொட்டியில் (sink) போட்டேன். கூடவே சில கூழாங்கற்களையும் போட்டேன். தொட்டியில் தண்ணீர் நிரம்பிக் கறுப்புத் தண்ணீரானது. நான் இன்னும் நிறைய மண்ணைக் கொட்டி நன்றாகக் கறுப்பாக்கினேன். தண்ணீர் நிரம்பிக் கொண்டே வந்து வழியத் துவங்கிய போது உதவி உதவி என்று கத்தினேன். அப்பா வந்து பார்த்தார். பின்னாலேயே அம்மாவும் வந்தார். என்னைக் குளியலறையை விட்டு வெளியே போகச் சொன்னார்கள். அப்பா கழுவுதொட்டிக்குக் கீழேயிருந்த சாமான்களை வெளியே எடுத்துவிட்டு அந்தக் குழாயையெல்லாம் கழற்றி, குச்சியை விட்டுக் குத்தியபோது கறுப்புத் தண்ணீர் இறங்கியது. கூழாங்கற்களையும், நான் அவ்வப்போது உள்ளே போட்டிருந்த பேப்பர், க்ரேயான் எல்லாவற்றையும் அப்பா எடுத்துக் காட்டினார். அவர் கோபமாயிருந்தது போலத் தெரிந்தார். அம்மா அந்த இடத்தையெல்லாம் துடைத்துக் கூட்டிச் சுத்தம் செய்தார். அப்பா என்னை உட்கார வைத்து, "இப்படிச் செய்ய வேண்டாமென்று எத்தனை முறை சொல்வது?" என்று கேட்டார். "நா இனிமே ச்செய்யல,"ன்னு வழக்கம் போலச் சொன்னேன். "சரி உட்கார்ந்து படிக்கலாம்"ன்னு சொல்லிட்டார். நான் அடம் எதுவும் செய்யாமல் ஒழுங்காக உட்கார்ந்து படித்தேன். அமைதியாக இருந்தேன். படுக்கப் போகும்போது அப்பா அம்மாவிடம் சொன்னார், "இப்பதான் தம்பி சொல்றதக் கேக்குறார்." உடனே நான் சொன்னேன், "ஆனா நா வருத்தமா இருக்கேன்." அவர்கள் என்னை முத்தமிட்டார்கள். அதற்கப்புறம் நாங்கள் உறங்கச் சென்றோம்.
இன்றைக்கு இந்தப் படத்தை வரைந்தேன். அப்பா வேலையிலிருந்து வந்ததும் பார்த்தார். கப்பல் என்றேன். தீ வந்தால் தண்ணீர் அடிக்கும் கப்பல் என்றேன். அதோ அந்த நீல நிறக் குழாய்தான் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் என்றேன். அப்பாவும் அம்மாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் என் அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னவா? செய்து முடித்தவுடன்தானே எனக்கே தெரியும்!
6 Comments:
நல்ல பதிவுகளும், கதையும், பாட்டும்! தொடர்ந்து எழுதவும்.
@நல்லது தம்பிப் பைய்யா.@
நல்லது சாரா சகா :-D
@தொடர்ந்து எழுதவும்.@
தொடர்ந்து படிக்கவும் சுந்தரவடிவேல் சகா :-D
படம் அருமை. அதைவிட உங்களது மழலை குறும்பு அருமை. உங்களது கள்ளமில்லா இதயம் இந்த நிகழ்வில் தெரிகிறது.
படங்களை சேகரித்து வைக்கிறீர்களா?
படம் நன்றாக வைந்திருக்கிறீர்கள்!
கழுவுத்தொட்டியில் மண்ணை அள்ளிப்போடக்கூடாது மழலை! ஆனா அப்பப்ப போடலாம். :)
-பொன்னார்மேனியன்
பரவாயில்லையே, தம்பி நல்ல ஓவியரா இருக்கிறீங்களே. ஆனா கொஞ்சம் குறும்பு, அதுவும் நல்லதுதான், பண்ணுங்க பண்ணுங்க:-)
பரவாயில்லையே, தம்பி நல்ல ஓவியரா இருக்கிறீங்களே. ஆனா கொஞ்சம் குறும்பு,அதுவும் நல்லதுதான், பண்ணுங்க பண்ணுங்க :-)
cheese cake
Post a Comment
<< Home